காவியக் கவிஞர் என்றும் வாலிபக் கவிஞர் என்றும் வர்ணிக்கப்பட்ட கவிஞர் வாலியின் 86 ஆவது பிறந்த நாள் இன்று. தமிழ்த் திரைப்படங்களில் காதல், தத்துவம், தெய்வ பக்தி, சமூக விழிப்புணர்வு, துள்ளலிசை என எல்லா வகைப் பாடல்களையும் ஜனரஞ்சகமாக எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வாலி.
மெட்டைச் சொல்ல சொல்ல அதற்கேற்ற வார்த்தைகளை மளமளவென்று கொட்டும் திறன் படைத்த கவிஞர் வாலி கடந்த 1931 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்தார். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். இருப்பினும் ஓவியர் மாலி என்பவரின் மேல் கொண்ட மதிப்பால் தன்னுடைய பெயரை வாலி என்று மாற்றிக் கொண்டார்.
1958 ஆம் ஆண்டில் வெளிவந்த அழகர்மலைக்கள்ளன் திரைப்படத்தில் "நிலவும் தாரையும் நீயம்மா , இந்த உலகம் ஒரு நாள் உனதம்மா" என்ற பாடல் தான் வாலியின் முதல் பாடல். தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தாலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த கற்பகம் திரைப்படம் தான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.தொடர்ந்து பல பாடல்களை எழுதி வந்த வாலி ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரின் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் விதமாக பல பாடல்களை எழுதத் தொடங்கினார். எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி கணேசனுக்கும் பல அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார் வாலி.
ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படத்தில் இவர் எழுதிய "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடல் திருச்சியுலுள்ள ஒரு கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனுக்குப் பல பாடல்கள் எழுதியிருந்தாலும் அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் அவர் எழுதிய உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் என்ற பாடல் தேசிய விருதைப் பெற்றது.
இதற்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுக்கு தொடர்ந்து பாடல்களை எழுதிக் குவித்தார் வாலி. பல பாடல்கள் விமர்சிக்கப்பட்டாலும், அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டும், புது விஷயங்களைக் கற்றுக் கொண்டும் பல ஜனரஞ்சகப் பாடல்களையும் படைத்திருக்கிறார் கவிஞர் வாலி.சினிமா தவிர, அவதார புருஷன், பாண்டவர் பூமி, இராமானுஜ காவியம் என பல கவிதை நூல்களையும் அவர் எழுதியுள்ளார். பொய்க்கால் குதிரை, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
தமிழ்நாட்டின் சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை 5 முறை பெற்றுள்ள கவிஞர் வாலிக்கு, கடந்த 2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. 56 ஆண்டுகளில் சுமார் 15,000 பாடல்கள் எழுதியுள்ள வாலி,காவியத்தலைவன் திரைப்படத்தில் எழுதிய பாடல் தான் அவரது கடைசிப்பாடலாக அமைந்தது.
2013ஆம் ஆண்டு, ஜூலை 18ஆம் நாள் சுவாசக் கோளாறு காரணமாக வாலி உயிரிழந்தார். இறந்தாலும் காற்று மண்டலத்தில் உலா வரும் தன்னுடைய பாடல்கள் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டேயிருப்பார் கவிஞர் வாலி