கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற சினேகன் - கன்னிகா திருமணம்: புகைப்படத் தொகுப்பு
பாடலாசிரியர் சினேகன் - நடிகை கன்னிகா ரவி திருமணம் இன்று நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வரும் சினேகன் 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டுமன்றி நடிகர், அரசியல்வாதி எனப் பணிபுரிந்து வருகிறார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார் சினேகன். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இந்த நிலையில் சினேகன், 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை கன்னிகா ரவியை இன்று திருமணம் செய்துகொண்டார். கன்னிகா ரவி 'தேவராட்டம்' உள்ளிட்ட சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் ‘கல்யாண வீடு’ சீரியலில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவர்கள் திருமணம் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், தமிழ் முறையில் நடந்தது.
கமல்ஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க சினேகன் மகிழ்ச்சியுடன் கன்னிகா ரவி கழுத்தில் கட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இன்று கிரீன் பார்க் ஓட்டலில் நடந்த இவர்களது திருமணத்தில், பாரதிராஜா, பழ.கருப்பையா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.