கல்லறை பூக்களுக்கும் கரிசனம் காட்டிய பாடலாசிரியர்... நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!

கல்லறை பூக்களுக்கும் கரிசனம் காட்டிய பாடலாசிரியர்... நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!
கல்லறை பூக்களுக்கும் கரிசனம் காட்டிய பாடலாசிரியர்... நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று!

தமிழ் சினிமா ரசிகர்களை தனது பாடல் வரிகளால் ஆட்சி செய்தவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

காதல், தாலாட்டு, வலி, அழுகை, ஆனந்தம் என அனைத்திற்குமே காஞ்சிபுரத்தை சேர்ந்த நா.முத்துக்குமாரின் வரிகள் தான் பலருக்கும் எனர்ஜி டானிக். இரண்டு முறை தேசிய விருதுகளை வென்ற அவர்  2016இல் இதே நாளில் மறைந்தார். 

‘கவிஞர் கண்ணதாசனுக்கு கிடைத்தது போல எங்களுக்கெல்லாம் கதைக்களமும், பாடல் சூழலும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் காதல் பாடலாகவே அமைந்துவிட்டது. அதனால் காதல் பாடல்களிலேயே தத்துவ வரிகளை நான் வைத்தேன்’ ஒரு பேட்டியில் அவரே சொல்லியுள்ளார்.

அவர் சொன்னது போல சினிமா பாடல்கள் என்றால் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்ததைகள் பெரிதும் கவனம் பெறாது. ஆனால் நா.முத்துக்குமாரின் காதல் பாடல்கள் ஒவ்வொன்றும் கவிதை ரகம். வார்ததைகளை பூ மாலையாக கோர்த்து பாடல் எழுதுவதில் அவர் வல்லவர். 

'கல்லறை மேலே பூக்கும் பூக்கள்

கூந்தலை போய் தான் சேராதே’ 

என காதல் கொண்டேன் படத்தின் பாடலில் சொன்ன அவரே தான்

‘கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்....

என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா’ 

என காதல் படத்தில் அதை மாற்றி எழுதியிருப்பார். 

‘ஒரு உருவகத்தை அடுத்த கட்டத்திற்கு எனது பாடல் வரிகளின் வழியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். உதாரணமாக காதல் கொண்டேன் படத்தில் கல்லறை பூக்களுக்கு அந்தஸ்த்தே இல்லை என்றேன். அதுவே காதல் படத்தில் கல்லறை பூக்களையும் வண்ணத்துப் பூச்சிகள் தேடி வரும் என எழுதியிருந்தேன். மறுபடியும் கல்லறை பூக்களை குறித்து நான் எழுதுவேன். அதற்கான கதை வந்தால் நான் எழுதுவேன்’ எனவும் ஒரு பேட்டியில் அவரே சொல்லியுள்ளார். 

பல்லாயிரக்கணக்கான வார்ததைகளை எழுதி வந்த அவரது பேனா பிடித்த கைகள் எழுதுவதை நிறுத்தாமல் இருந்திருந்தால் இந்நேரம் அது பல லட்சங்களை தாண்டியிருக்கும்.  

அவர் உடலளவில் இந்த பூமியை விட்டு மறைந்திருந்தாலும் காற்றினில் அவரது வரிகள் இசையாக ஒலித்து கொண்டிருக்கும் வரை வாழ்ந்து கொண்டே இருப்பார் நா.முத்துக்குமார். கலைஞனுக்கு என்றுமே மறைவு என்பதில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com