தெய்வமகன் to இரவின் நிழல்.. ஆஸ்கர் கதவை தட்டிப் பார்த்த தமிழ் சினிமாக்கள் - ஓர் பார்வை

தெய்வமகன் to இரவின் நிழல்.. ஆஸ்கர் கதவை தட்டிப் பார்த்த தமிழ் சினிமாக்கள் - ஓர் பார்வை
தெய்வமகன் to இரவின் நிழல்.. ஆஸ்கர் கதவை தட்டிப் பார்த்த தமிழ் சினிமாக்கள் - ஓர் பார்வை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி விருதுபெற்றார். இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு சென்ற தமிழ் படங்களைப் பற்றி காணலாம்.

1. தெய்வமகன் (1969)

நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி, 3 வேடங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்த திரைப்படம் ‘தெய்வமகன்’. இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் படம். கடந்த 42-வது ஆஸ்கர் விருது வழங்கும் பட்டியலில் ‘தெய்வமகன்’ படம் இடம் பெற்றிருந்தது. ஏ.சி. திருலோகச்சந்தர் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பண்டரி பாய், எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர்.

2. நாயகன் (1987)

கமல் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘நாயகன்’. உண்மைக் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. மும்பையில் தாதாவாக செயல்பட்ட வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக இந்தப் படம் கொண்டிருந்தது. தேசிய விருது பெற்ற இந்தப் படம், 1988-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு நாயகனை உலக நாயகனாக்கியது.

3. அஞ்சலி (1990)

மணிரத்னம் இயக்கத்தில் தாய் மற்றும் மகளின் பாசப் போராட்டத்தை மையமாக கொண்டு வெளியானப் படம் ‘அஞ்சலி’. தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்ற இந்தப் படம், 63-வது ஆஸ்கர் விழாவில், சிறந்த வெளிநாட்டு பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இந்தப் படம் இறுதிப் பட்டியலுக்கு தேர்தெடுக்கப்படவில்லை. ‘நாயகன்’, ‘அஞ்சலி’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றதால், அதன்பிறகு நாட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மணிரத்னம் மாறினார்.

4. தேவர் மகன் (1992)

கமல்ஹாசன், சிவாஜி, நாசர் நடிப்பில் மிரட்டலாக வந்தப் படம் ‘தேவர் மகன்’. இந்திய சினிமா உலகமே வியந்து பார்த்த இந்தத் திரைப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். சாதியை மையப்படுத்தி கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

5. குருதிப்புனல் (1995)

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், நாசர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘குருதிப்புனல்’. தேசப்பற்றை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளது. 68-வது ஆஸ்கர் விழாவில், வெளிநாட்டு படப்பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட இந்தப் படம், இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.

6. இந்தியன் (1996)

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியானப் படம் ‘இந்தியன்’. ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் இந்திய அளவில் தனி கவனம் பெற்றது. 4 தேசிய விருதுகளை பெற்ற இந்தப் படம், சர்வதேச திரைப்பட பிரிவிலும், வெளிநாட்டு படப் பிரிவிலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

7. ஜீன்ஸ் (1998)

மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இரட்டையர்களை மையமாக வைத்து உருவான ‘ஜீன்ஸ்’ திரைப்படம், இந்தியாவில் இருந்து 71-வது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான இந்தப் படம் உலக அதிசயங்களான 7 இடங்களில், பிரமாண்டமாக பாடல் ஒன்றும் படம்பிடிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றது. சுவாரஸ்ய திரைக்கதை மற்றும் காதல் காட்சிகள் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்ததாலும் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் வரை தேர்வானது.

8. ஹே ராம் (2000)

சுதந்திரத்திற்கு பின்னர் இஸ்லாமிய மற்றும் இந்து மதத்துவருக்கு இடையே நடக்கும் போராட்டம் தான் ‘ஹே ராம்’ படம். கமல்ஹாசனின் மிகச்சிறந்த நடிப்பு மற்றும் தரமான படங்களின் வரிசையில் ‘ஹே ராம்’ திரைப்படமும் நிச்சயம் இடம்பெறும். பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கானும், கமல்ஹாசனும் தொல்லியல் ஆய்வாளர்களாக இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப்படத்தை கமலே இயக்கியிருந்தார். தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த இந்தப் படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

9. விசாரணை (2015)

வெற்றிமாறன் இயக்கத்தில் மிகச்சிறந்த படைப்பாக உருவான ‘விசாரணை’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் சந்திரக்குமாரின் லாக்அப் (Lock Up) நாவலை தழுவி இந்தப் படம் உருவாக்கப்பட்டது. தேசிய விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை வெற்றிப்பெற்ற இந்தப் படம் 89-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை தேர்வானது. சமுத்திரக்கனி, ‘அட்டக்கத்தி’ தினேஷ் இந்தப் படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

10. ஒத்த செருப்பு (2019)

வித்தியாசமான திரைக்கதையில், ஒரே மனிதனை வைத்துக்கொண்டு சுவாரசியமான திரைப்படத்தை ரசிக்கும்படி கொடுக்க முடியும் என்பதை இந்திய சினிமாவுக்கு ‘ஒத்த செருப்பு’ படம் மூலம் உணர்த்தினார் ஆர். பார்த்திபன். இவரின் சுயமுயற்சியில் இந்தப்படத்தினை ஆஸ்கார் விருதுக்கு இந்தப்படத்தினை அனுப்பி வைத்தார். இந்த படமும் வெளிநாட்டு படப்பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

11. சூரரைப் போற்று (2020)

சுதா கொங்கராவின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் உருவான படம் ‘சூரரைப் போற்று’. ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறுவதற்கான உத்தேசப் பட்டியல் போட்டியில் தொடர்ந்து 7 நாட்கள் சூரரைப் போற்று திரையிடப்பட்டு, அங்குள்ள ஜூரிக்களால் தேர்வு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 366 படங்கள் இறுதியில் போட்டியில் கலந்து கொண்டன. அதில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ம் கலந்து கொண்டது. எனினும், இந்தப் படம் இறுதியில் தேர்வு செய்யப்படவில்லை.


12. மண்டேலா (2021)

அஷ்வின் இயக்கத்தில், அரசியலை நகைச்சுவையாக சொல்லி கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருந்த படம் ‘மண்டேலா’. இந்தப் படம் அனைவரின் பாராட்டையும் பெற்று 94-வது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

13. கூழாங்கல் (2021)

நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து எஸ்.வினோத்ராஜ் இயக்கிய படம் ‘கூழாங்கல்’. இந்தப் படமும் 94-வது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தப்படம் ஏழை தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் ஒருநாள் சம்பவங்களை விவரித்தது. 93 நாடுகளில் இருந்து கலந்துகொண்ட 93 படங்களில் இருந்து 15 படங்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் ‘கூழாங்கல்’ படம் இடம்பெறவில்லை.

14. ஜெய்பீம் (2021)

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடும் வழக்கறிஞரின் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாக்கிய திரைப்படம் ‘ஜெய்பீம்’. ஆஸ்கரின் 2021-ஆண்டுக்கான ஓபன் கேட்டகரியில், அதாவது நேரடியாக இடம்பெற்றது. ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய்பீம்’ திரைப்படமும் இடம் பெற்றது. இப்பட்டியலில் உலகளவில் 276 படங்கள் இடம் பெற்ற நிலையில், சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படமும் இடம் பெற்றது.

15. இரவின் நிழல் (2022)

95-வது ஆஸ்கருக்கான தகுதிப் பெற்ற (Eligible List) அதாவது முதல் இறுதிப் பட்டியலில் தேர்வான 301 படங்களின் பட்டியலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு இருந்தது. இதில், பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படம் இடம் பிடித்திருந்தது. சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தில் பார்த்திபனுடன், வரலஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பார்த்திபன் இந்தப் படத்தை இயக்கி நடித்திருந்தார்.

16. ராக்கெட்ரி நம்பி விளைவு (2022)

இதேபோல் 95-வது ஆஸ்கருக்கான முதல் இறுதிப் பட்டியலில் தேர்வான 301 படங்களின் பட்டியலில் மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படமும் இடம்பெற்றிருந்தது. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாரயணின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை மாதவன் முதன்முறையாக இயக்கியிருந்தார். மேலும் நம்பி நாரயணனாக மாதவனும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்திருந்தனர். இந்தியில் ஷாருக்கானும், தமிழில் சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர்.

ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களின் இறுதிப் பட்டியல் ஒன்று, பல்வேறு கட்ட வடிகட்டுதல்களுக்குப் பின்னர் பிறகு தேர்ந்தெடுக்கப்படும். இதில் சிறந்தப் படம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு 6 முதல் 8 படங்கள் வரை இறுதி பரிந்துரைக்கு தேர்வு செய்யப்படும். அவற்றில் இருந்து சிறந்ததாக தேர்வு செய்யப்படும் படத்திற்கும், கலைஞர்களுக்குமே ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com