மீண்டும் ரிலீசான 'பாபா' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?

மீண்டும் ரிலீசான 'பாபா' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?
மீண்டும் ரிலீசான 'பாபா' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா?

தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் மிக முக்கியமான உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கக் கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். டிசம்பர் 12ம் தேதி வந்தாலே அவரது ரசிகர்கள் குஷியாவது வழக்கமே. ஆனால் இந்த ஆண்டு பாபா படம் புதுப்பிக்கப்பட்டு ரிலீசானது போனஸ் மகிழ்ச்சியாகவே அவர்களுக்கு இருந்திருக்கிறது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 10ம் தேதி ரஜினிக்கு மிகவும் நெருக்கமான படமான பாபா ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாக பல ஆண்டுகளாக சொல்லி வந்தவர் கடந்த ஆண்டு தன்னுடைய உடல்நிலை உள்ளிட்ட பிற காரணங்களை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

ஆகையால் பாபா படத்தில் இடம்பெற்றிருந்த அரசியல் காட்சிகள் உட்பட சில முக்கியமான காட்சிகள் வெட்டப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியிடப்பட்டாலும் அதே துள்ளலோடு ஆர்ப்பரிப்போடும் ஏதோ புதுப் படத்தை பார்ப்பதை போல தியேட்டர்களில் ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள்.

இருப்பினும் ட்ரிம் செய்யப்பட்ட பாபா படத்தை காட்டிலும் பழைய பாபா படத்தையே விரும்பியிருப்பதை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அதன்படி புதுப்பிக்கப்பட்ட பாபா படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன என்பதை காணலாம்.

1) ரஜினி அறிமுக காட்சி:

“பாபா வந்துட்டு இருக்கான்” என சுஜாதா சொன்னதும் பாபா முத்திரையோடு ரஜினியின் அறிமுக காட்சிக்கு பிறகு டிப்பு டிப்பு பாடல் இடம்பெறும். ஆனால் ரீ ரிலீசான பாபாவில் அந்த இன்ட்ரோ காட்சி தூக்கப்பட்டிருக்கிறது.

2) வாலிபால் கோர்ட் சண்டை காட்சி:

கபார் பாயாக வந்த கிட்டியை அமைச்சர் மகன் அடித்ததற்காக ரியாஸ்கானுடன் ரஜினி வாலிபால் கோர்ட்டில் வைத்து சண்டையிடும் காட்சி நீக்கப்பட்டிருக்கிறது.

3) ஆட்டோக்காரரிடம் ரஜினி பேசும் காட்சி:

மனிஷா கொய்ராலா ரஜினியை ஆட்டோவில் அழைத்து சென்றபோது, ஆட்டோக்காரரிடம் “ஏய் போய்டாத” என ரஜினி சொல்ல அதற்கு அந்த டிரைவரும் “உன்ன விட்டு போவேனா” என சொல்லும் காட்சி நீக்கப்பட்டிருக்கிறது.

4) இப்போ ராமசாமி - பாபா மீட்டிங் காட்சி:

அமைச்சர் இப்போ ராமசாமியாக வந்த ஆஷிஷ் வித்யார்த்தி பாபா ரஜினியை அழைத்து வர ஆட்களை அனுப்பிய போது, அதற்கு ரஜினி “இப்போவே பாக்கனும்னு சொன்னாங்களா? இப்போவே வரனு” சொல்றதும், “எந்த வீடு சவுகார்பேட்டையா, சைதாப்பேட்டையானு” கேட்கும் காட்சியும் இடம்பெறவில்லை.

5) 7 மந்திரம் 5 ஆக மாறியது:

இமயமலையில் பாபாஜியை பார்த்த பிறகு ரஜினிக்கு மந்திரங்கள் கொடுத்து அதனை 7 முறை பயன்படுத்திக் கொள்ளலாம் என சொல்லப்படும். அது பாபா ரீ ரிலீஸில் 5 ஆக குறைக்கப்பட்டிருக்கும். அதனால் படத்தில் இடம்பெற்றிருந்த ஜப்பான் பெண்ணின் காட்சி மொத்தமும் நீக்கப்பட்டிருக்கும்.

6) படையப்பா நீலாம்பரி காட்சி:

மந்திரம் வேலை செய்யுமா இல்லையா என சோதித்து பார்க்க மார்க்கெட்டில் வைத்து பாபா மந்திரத்தை பயன்படுத்த அப்போது படையப்பா நீலாம்பரி ரஜினியிடம் வந்து டைம் கேட்கும் காட்சியும் இடம்பெறவில்லை.

7) ரசிகர்களுக்கு பிடித்தமான ‘நீ யாரு’னு கேட்கும் காட்சி:

மனிஷா கொய்ராலாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்த போது ஒவ்வொருவரிடமாக நீ யாரு நீ யாரு பாபா கேட்க நண்பரை மட்டும் விட்டு வைக்கும் காட்சி பாபா ரீ ரிலீஸில் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சி முக்கியமான மீம் டெம்ப்ளேட்டாகவே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

8) டெல்லி கணேஷ் - கவுண்டமணி CM காட்சி:

பாபா யாரை முதலமைச்சராக வருவது என மந்திரத்தை பயன்படுத்தும் காட்சியில் கவுண்டமணி, டெல்லி கணேஷ் போட்டிப்போட்டு நான் முதல்வராக தயார் என வரும் காட்சியில் டெல்லி கணேஷை கவுண்டமணி கிண்டல் செய்யும் காட்சி நீக்கப்பட்டிருக்கிறது.

9) சக்தி கொடு பாட்டின் முக்கியமான வரி:

அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்ததால் “முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன், முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன்” சக்தி கொடு பாட்டில் வரும் வரிகள் பாபா ரீ ரிலீஸில் இடம்பெறவில்லை. ஆனால் “உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்” என வரும் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.

10) ராஜ்யமா பாடல் :

7 மந்திரங்கள் 5 ஆக குறைக்கப்பட்டதால் “இவன் வசம் இருந்தது ஏழு வரம், ஏழும் இன்று தீர்ந்தாச்சு, கைவசம் ஒரு வரம் இல்லையடா காப்பதேது தாய் மூச்சு” என ராஜ்யமா பாடலில் இடம் பெற்றிருந்த வரிகள் நீக்கப்பட்டிருக்கிறது.

11) கிளைமேக்ஸ் காட்சி:

இமயமலைக்கு சென்று பாபாஜியிடம் பார்த்து தன்னை உங்கள் சிஷ்யனாக ஏற்கும்படி கேட்கும் ரஜினியிடம், “நான் வெச்ச பரீட்சையில் ஜெயிச்சுட்ட. ஆனா தாயோட மனச நோகடிச்சுட்ட. என்னதான் தானம் தர்மம் செஞ்சாலும் தாயை சந்தோஷமா வெச்சிக்கலனா மோட்சம் கிடைக்காது. அடுத்த ஜென்மத்துலயும் உன்னோட தாய்க்கே மகனாக பிறந்து அவரது விருப்பங்களை நிறைவேற்றினா அப்போ நானே உன்ன அழைக்கிறேன்” என பாபாஜி சொல்வது போல காட்சி முழுக்கவே மாற்றப்பட்டிருக்கும்.

இப்படியான முக்கியமான ரசிகர்களை கவர்ந்த காட்சிகள் அனைத்தும் பாபா ரீ ரிலீஸில் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் சற்று அதிருப்தியான ரசிகர்கள், “இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லையே இருந்திருக்கலாம்” என்றுச் சொல்லி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இருப்பினும் பாபா ரீ ரிலீஸின் முதல் நாளிலேயே உலகெங்கும் கிட்டத்தட்ட ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com