எஸ்.பி.பி.க்காக சிறப்பு கூட்டு பிரார்த்தனை ஏறெடுப்போம் - இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்
பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதைத் தொடர்ந்து பல பிரபலங்களும், பொது மக்களும் அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா நாளை மாலை 6 மணியளவில் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
பாரதிராஜா பேசுகையில், ’’என் இனிய தமிழ் மக்களே இந்திய திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது இனிமையான குரலால் மகிழ்வித்ததும், மொழிகளை வளப்படுத்திக் கொண்டிருந்த ஒரு இசைக்குயில் எஸ்.பி.பி, மூச்சுவிட முடியாமல் இன்று தவித்துக்கொண்டிருக்கிறார். எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியைக் கேள்விப்படும் தமிழ் திரையுலகம் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் அத்தனை பேருமே கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என வேறுபாடு இல்லாமல் அவரை நேசிக்கிறோம். அவர் ஒரு பண்பாளர். அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்த ஒருவர். அந்த மாபெரும் கலைஞனை நாம் மீட்டுவரவேண்டும். அவர் மீண்டு வரவேண்டும்.
அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழிலாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் நாளை மாலை 6 மணியளவில் ஒரு நிமிடம் மௌனப் பிரார்த்தனை ஏறிட்டு, அவர் பாடிய ஏதேனும் ஒரு பாடலை ஒலிக்கவுள்ளோம். அவர் பாடலில் ஒரு ஜீவன் இருக்கும்.
எம்.ஜி.ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்தபோது உலகமே பிரார்த்தித்தோம். அந்த பிரார்த்தனைதான் அவரை மீட்டுக் கொண்டுவந்தது. அதேபோல் உலகெங்கிலும் அவர் இசையைக் கேட்டு மகிழ்ந்த அனைவரும் இந்த பிரார்த்தனையை ஏறெடுக்கலாம். அவர் மீண்டும் எழுந்து வருவார். இன்னும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடுவார். எதிர்கால சந்ததியும் கேட்டு மகிழும்’’ என பேசியுள்ளார்.