லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. சஞ்சய் தத், ஜிவிஎம், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது.
படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் நடைபெற இருந்த இசைவெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, அடுத்தடுத்த அப்டேட்டுகள் கொடுக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது.
அதற்கேற்ப, படத்தின் இரண்டாவது பாடலை சொன்னபடி இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான முதல் பாடல் ‘நா ரெடி தான்’ யூடியூபில் சுமார் 140 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியான பாடலும் யூடியூபில் வரவேற்பை பெற்றுள்ளது.
விஷ்ணு எடவன் எழுத்தில் உருவான பாடலை படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே பாடியுள்ளார். பாடலில் இடம்பெற்றுள்ள “சிங்கம் எறங்குனா காட்டுக்கு விருந்து.. இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து.. பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி.. கொடல் உருவுற சம்பவம் உறுதி. இதுவரயில நல்லவன் இருந்தான்.. இந்த கதையில ராட்சசன் பொறந்தான்” என்றும், “பல ராஜாக்கள பாத்தாச்சிமா.. ரொம்ப ரொம்ப ஆடாதமா..” என்றும் இடம்பெற்றுள்ள வரிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.