மறக்க முடியுமா?  மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!

மறக்க முடியுமா? மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!

மறக்க முடியுமா? மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!
Published on

பிரபல திரைப்பட ஜாம்பவான் மகேந்திரன் காலமாகிவிட்டார் இன்று. அஞ்சலியால் நிரம்பி வழிகிறது சமூக வலைத்தளங்கள். அவர் பற்றியும் அவர் படங்கள் பற்றியும் பேச, சொல்ல ஏராள கதைகள் இருப்பதாகச் சொல்கிறது திரையுலகம். 

மகேந்திரன், 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா. ஆசிரியர். தாயார் மனோன்மணி, கம்பவுன்டர். மகேந்திரனின் இயற்பெயர் அலெக்ஸாண்டர். பள்ளி, கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டார். சீனியர் விளையாட்டு வீரர் எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார். இப்படித்தான் அலெக்ஸாண்டர், மகேந்திரன் ஆனார். 

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ’பி.ஏ' படித்துக்கொண்டிருந்தபோது, 1958-ஆம் ஆண்டு கல்லூரி விழா நடந்தது. அதில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார். அவரது பேச்சை ரசித்த எம்.ஜி.ஆர், வாழ்த்துக்களை எழுதி கொடுத் தார். 

சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், 'இனமுழக்கம்' என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சினிமா விமர்சன மும் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்புக்குச் சென்றார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே, நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

மறுநாள் மகேந்திரன், லாயிட்ஸ் ரோட்டில் இருந்த அவர் வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை திரைக்கதை எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர். அந்த திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி. ஆர். "அனாதைகள்'' என்ற நாடகத்தை எழுதினார். அதை ‘வாழ்வே வா’' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தார். பைனான்சியர் இறந்ததால் அந்தப் படம் பாதியில் நின்றுவிட்டது.  இந் நிலையில் "காஞ்சித் தலைவன்'' படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக, மகேந்திரனை சேர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர். 

1966-ம்ஆண்டு "நாம் மூவர்'' படத்துக்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி கணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.

"துக்ளக்'' பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்த மகேந்திரனை, நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும் நாடகம் ஒன்றை எழுதித்தரும்படி கேட்டனர். "இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் எழுதி கொடுத்தார், மகேந்திரன். அதில் எஸ்.பி.சவுத்ரி என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.
  
நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இதை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்றார். ‘இரண்டில் ஒன்று, ’தங்கப்பதக்கம்’ ஆகி வரவேற்பை பெற்றது. இது படமானபோது, கதை-வசனத்தை மகேந்திரன் எழுத, பி.மாதவன் இயக்கி னார். அதனைத் தொடர்ந்து ஆடுபுலி ஆட்டம், காளி உட்பட பல படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை என எழுதினார்.

இந் நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மகேந்திரனுக்கு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். உமா சந்திரனின் "முள்ளும் மலரும்'' நாவலை திரைக்கதை, வசனம், எழுதி படமாக்கினார் மகேந்திரன். இந்தப் படம் அவரைச் சிறந்த இயக்குனர் ஆக்கியது. அடுத்து, புதுமைப் பித்தனின் "சிற்றன்னை'' கதையை "உதிரிப்பூக்கள்'' ஆக்கினார். சிறந்த கலைப்படைப்பாக இன்றுவரை பாராட்டப்படுகிறது இந்தப் படம். திரைப்படம் என்பது விஷுவல் மீடியம் என்பதை முதன் முதலில் உணர்த்திய தமிழ்ப் படம் இதுதான்.

இவர் இயக்கிய "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' சென்னையில் ஒரு வருடம் ஓடியது.  ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் 1980 ல் இவர் இயக்கிய "ஜானி'' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. இன்றுவரை பேசப்படும் திரைப்படங்களில் ஜானிக்கும் இருக்கிறது இடம்!

’தெறி’ மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன், நடிப்பிலும் முத்திரைப் பதித்தார். மகேந்திரன் தனது படைப்புகள் மூலம் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com