''ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்''- தனுஷ் குறித்து மாளவிகா மோகனன்
தனுஷிடம் இருந்து ஒவ்வொரு நாளும், கற்றுக்கொண்டதாக நடிகை மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துருவங்கள் பதினாறு, மாப்ஃயா, நரகாசுரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதியப்படத்தை இயக்கி வருகிறார். சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன், சூரரைப் போற்று புகழ் கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் தனுஷூடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இணைத்து ஒரு பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ உங்களை சந்தித்ததும், உங்களோடு பணியாற்றியதும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது. உங்களிடம் இருந்து ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டேன். நாம் இருவருக்குமே ‘மேகி’ மீது அதிக பிரியம் இருந்தது. முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் இராண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்க உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் D43 படத்தின் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததாக தெரியவருகிறது.
அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனுஷ் அமெரிக்கா செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.