’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு தளத்தில் உற்சாமுடன் தனுஷ்; வைரல் புகைப்படங்கள்!
அமெரிக்காவில் ’தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் உள்ள நடிகர் தனுஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளன.
தனுஷ் நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ‘கர்ணன்’ சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக ‘ஜகமே தந்திரம்’, ‘அட்ராங்கி ரே’ உள்ளிட்ட படங்கள் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, கார்த்திக் நரேன், ராம்குமார் இயக்கத்தில் பெயரிடாதப் படங்களில் இணைந்துள்ள தனுஷ் அவெஞ்சர்ஸின் இன்ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படத்திலும் இணைந்தார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி கடந்த மார்ச் மாதம் முதல் தனுஷ் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் இருக்கிறார்.
இதனால், ‘கர்ணன்’ பட வெளியீட்டுக்குக்கூட தனுஷ் தமிழகம் வரவில்லை. அமெரிக்காவில் இருந்தபடியே ’கர்ணன்’ வெற்றிக்காக மாரி செல்வராஜை வாழ்த்தியவர், ’மாரி செல்வராஜுடன் மீண்டும் இணைகிறேன்’ என்பதை அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.