Krrish 4 ரிலீஸ் எப்போது...? அப்டேட் சொன்ன ராகேஷ் ரோஷன் | Hrithik Roshan
ராகேஷ் ரோஷன் உருவாக்கிய இந்திய சூப்பர் ஹீரோ படம் `கிரிஷ்'. 2003ல் ராகேஷ் இயக்கி ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான Koi... Mil Gaya படத்தின் தொடர்ச்சியாக உருவான `கிரிஷ்' மிகப்பெரிய ஹிட்டானது. இந்தி சினிமாவாக இருந்தாலும் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றது. அடுத்த பாகமான `கிரிஷ் 3' 2013ல் வெளியானது.
`கிரிஷ்' படத்தின் நான்காவது பாகத்தை நடிகர் ஹ்ரித்திக் ரோஷனே இயக்கி நடிப்பார், இதனை ஆதித்யா சோப்ரா மற்றும் நான் இணைந்து தயாரிக்க உள்ளோம் என கடந்த மார்ச் மாதம் அறிவித்தார் இயக்குநரும் ஹ்ரித்திக்கின் தந்தையுமான ராகேஷ் ரோஷன். ஆனாலும் படத்தின் வேலைகள் எதுவும் துவங்கப்படாமலே இருந்தது.
தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் `கிரிஷ் 4' படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார் ராகேஷ் ரோஷன். அதில் "படத்தின் ஸ்கிரிப்ட் எழுத அதிக நேரம் எடுக்கவில்லை. ஆனால் பட்ஜெட் முடிவு செய்வதில் பெரிய அழுத்தம் இருந்தது. இப்போது படத்தின் திட்டவட்டமான பட்ஜெட்டைப் பற்றிய தெளிவு வந்துவிட்டது. பட வேலைகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டின் மத்தியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளோம். ஏனென்றால், இந்தப் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் மிகவும் முக்கியமானவை. எனவே, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும். 2027 ஆம் ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார் ராகேஷ்.