ரஷ்யாவில் விருது வென்ற கொட்டுக்காளி.. சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்குரல்.. தமிழில் பேசிய இயக்குநர்!
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருந்த கொட்டுக்காளி திரைப்படம், திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்று குவித்தது. படம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்புடன் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்கில் வெளியான கொட்டுக்காளி விமர்சன ரீதியாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் சூரி மற்றும் அன்னா பென் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தில் இசை இல்லாதது படத்திற்கு கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது. தங்கள் வீட்டுப் பெண் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்ததற்காக அவளை என்னவெல்லாம் செய்கிறது ஒரு குடும்பம் என்பதே கொட்டுக்காளியின் சுருக்கமான கதை. படத்தில் பெண்கள் மீது செலுத்தப்படும் அடக்கு முறைகள், சாதியம், சமமற்ற தன்மை, குடும்ப அமைப்பு, மூட நம்பிக்கைகள், ஒரு ஆணின் பிடியில் சிக்கித் திணறும் பெண்ணின் எதிர்காலம் எனப் பல விஷயங்களை அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்
கொட்டுக்காளி திரைப்படத்தை பார்த்தபின், மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என பல நட்சத்திரங்கள் படக்குழுவை பாராட்டி வாழ்த்தினர். இயக்குநர்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர். தமிழ் சினிமாவில் உலக சினிமா உருவாகி வருவதாக பலரும் சிலாகித்தனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு விருதை வென்றுள்ளது. அவ்விருது விழாவில் பேசியிருக்கும் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் தமிழில் பேசி அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்குரல்..
ரஷ்யாவில் நடைபெற்ற ’Amur Autumn’ சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடிப்பில் உருவாகியிருந்த கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது. அதில் ரசிகர்களின் ஆதரவை அள்ளிய கொட்டுக்காளி படம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்று அசத்தியது.
விருதை வென்றபிறகு மேடையில் பேசிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், நான் என் தாய்மொழியில் பேச விரும்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த விருது முக்கியமான தருணத்தில் எனக்கு கிடைத்துள்ளது. இதை நான் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், துணை தயாரிப்பாளர் கலை, நடிகர்கள் சூரி, அனாபென், புரடக்சன் டிபார்ட்மென்ட், எப்போதும் என்னைவிட்டு போகாத என்னுடைய டீம், திரைப்படத்தின் பலமாக இருந்த அனைவருக்கும், எனது மனைவி மற்றும் குழந்தைக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்து அனைவருக்கும் நன்றியையும் கூறினார்.
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் சர்வதேச அரங்கில் தமிழில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.