போதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...? kill the messenger - 2014

போதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...? kill the messenger - 2014
போதைப் பொருள் விற்றதா அமெரிக்க அரசு...? kill the messenger - 2014

யுத்தம் இந்த சொல்லுக்கு பின் இயங்கும் வர்த்தகம் ஏராளம். அமைதியை விரும்பும் நாடுகளும் கூட ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றன, விற்பனை செய்கின்றன. உலகம் முழுவதும் நடக்கும் யுத்தங்களுக்கு ஆயுதங்கள் தேவை எனில் ஆயுதங்கள் வாங்க பணமும், பணம் திரட்ட போதைப் பொருள் வணிகமும் என ஒரு சங்கிலி போல மனிதன் தனக்குத் தானே சுயகொல்லி வைத்துக் கொள்கிறான். வளர்ந்த நாடுகளோ, வளரும் நாடுகளுக்குள் யுத்தத்தை மறைமுகமாகவோ நேரடியாகவோ ஊக்குவிப்பதன் மூலம் ஆதாயம் பெறுகின்றன.

நிகராகுவாவில் 1980 முதல் 1990-கள் வரை நடந்த உள்நாட்டு கிளர்ச்சிக்கு அமெரிக்கா பெரிதும் ஆயுத உதவி செய்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா நிகராகுவாவில் நடக்கும் காண்ட்ரா கிளர்ச்சிக்கு உதவுவது தடை செய்யப்பட்டது. ஆனாலும் நிகராகுவாவிடம் இருந்து கடத்தப்படும் கொக்கைன் போதைப் பொருளை உள்நாட்டுக்குள் அனுமதித்தது, ஆப்ரிக்க அமெரிக்கர்களை போதைக்கு அடிமைப்படுத்தி பணம் திரட்ட அக்கிளர்ச்சியார்களுக்கு உதவியது என பல குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது உண்டு.

இதனை 90-களின் மத்தியில் அமெரிக்க பத்திரிக்கையொன்றின் நிருபர் ’காரி வெப்’ புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வந்தார். ஆனால் இது அரசுக்கு எதிரான போலியான குற்றச்சாட்டு என மூடி மறைக்கப்பட்டது. அவர் தனது புலனாய்வைக் கொண்டு ’Dark Alliance’ என்ற புத்தகத்தை எழுதினார். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உண்மைக் கதை தான் 2014’ல் வெளியான kill the messanger என்ற அமெரிக்க சினிமா

1990-களில் நடக்கும் இக்கதையில் ‘காரி வெப்’ நேர்மையும் உழைப்பும் கொண்ட நிருபர். அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோவில் ‘மெர்க்குரி நியூஸ்’ என்ற பத்திரிக்கையில் வேலை செய்யும் அவருக்கு தொலை பேசி மூலம் ஒரு தகவல் கிடைக்கிறது. தொலைபேசியில் பேசிய பெண்ணை சந்தித்து சில தகவல்களை பெறுகிறார். அதை தொடர்ந்து போகும் போது அவருக்கு பெரிய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

’டானிலோ ப்லோண்டன்’ - இவன் தான் அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்துவதில் மூளையாக இருந்து செயல் படுகிறவன். நிகராகுவாவில் இருந்து மத்திய அமெரிக்காவுக்கு கொண்டு வரப்படும் போதை பொருள் பிறகு சி.ஐ.ஏ உதவியுடன் உள்ளூர் விமானிகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்கப்படுகிறது என்ற உண்மை அறியவரும் போது அதிர்ந்து போகிறார் ‘காரிக் வெப்’.

ரிக்கி என்பவனை சிறையில் சந்தித்து பேசும் ‘காரிக் வெப்’ பெறும் தகவல்கள் இவ்விசாரணையை விரிவுபடுத்த உதவியாக இருக்கிறது. இது தன் சொந்த அரசாங்க பாதுகாப்புடன் இயங்கும் பெரிய நெட்வொர்க் என அறியவரும் போதும் தன் உயிரை பணயம் வைத்து உண்மை நாயகன் ‘காரிக் வெப்’ தன் விசாரணையில் முன்நகர்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து நிராகுவா சென்று கடத்தல் காரன் ’ரான்வென் மேனேய்சஸ்’ உள்ளிட்டோரை சந்தித்து மேலதிக தகவல்கள் திரட்டுகிறார். அதிகாரிகளிடம் இருந்து வரும் மிரட்டல்களையும் தாண்டி அவர் இச்செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வதில் முழுகவனம் செலுத்துகிறார். இறுதியாக ’Dark Alliance’ எனும் தலைப்பில் தனது கட்டுரையை தலைமை பெண் நிருபருக்கு அனுப்பும் போது “தயவு செய்து இதில் பெரிய மாற்றம் செய்யாமல் அப்படியே அச்சிடுங்கள்” என்கிறார்.

’மெர்க்குரி நியூஸ்’ இதழ் அரசுக்கு எதிரான இச்செய்தியை துணிச்சலாக வெளியிடுகிறது. அந்த ஆண்டின் சிறந்த நிருபராக ‘காரிக் வெப்’ தேர்வு செய்யப்படுகிறார்.

துரதிஷ்டவசமாக அவரிடம் உள்ள ஆதாரங்கள் பலவீணமாக இருப்பதால். ’மெர்க்குரி நியூஸ்’ மன்னிப்பு கடிதம் வெளியிடும் நிலை உருவாகிறது ‘காரிக் வெப்’ தன் கண்முன்னேயே தன் உழைப்பு கொலை செய்யப்படுவதைக் கண்டு மனம் நொந்து போகிறார். “தான் நிருபர் பணியை தேர்வு செய்தது, மக்களிடம்  உண்மையை கொண்டு செல்வதற்காக. ஆனால் அதை சரியாக செய்ய முடியாத சூழலில் இந்த வேலைக்கு தான் தகுதியற்றவன்” என சொல்லி தனக்கு பாராட்டுவிழா நடக்கும் மேடையிலேயே தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கண்ணீரோடு விடை பெறுகிறார்.

பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து 2004-ஆம் வருடம் ’காரிக் வெப்’ தனது வீட்டின் அறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2014-இல் வெளியான இத்திரைப்படம் ’Traverse City Film Festival’-ல் சிறந்த அமெரிக்க திரைப்படம் என விருது பெற்றது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் வருகிறது. படத்தின் இயக்குனர் Michael Cuesta அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனராக தன் பயணத்தை துவங்கியவர். ”the heart locker” படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ’ஜெர்மி லீ ரேன்நேர்’ இப்படத்தில் ‘காரிக் வெப்’ பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ஆவார். இப்படத்தின் இறுதியில் நிஜ நாயகன் ‘காரி வேப்’ தன் குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. உலகளவில் ஆண்டிற்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது என ஒரு ஆய்வு சொல்கிறது. இதில் எத்தனை கோடி வல்லரசுகளின் ஆதரவுடன் என்பது தான் கேள்விக்குறி.

ஆயினும் அமெரிக்க அரசுக்கு எதிராக பேசும் ஒரு படைப்பை அவர்கள் நாட்டிலேயே உருவாக்கி திரையிட முடிகிறது என்பதும், நமது நாட்டின் படைப்பு சுதந்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அம்சம் இது. என்பதும் கவனித்திற்குரியது.

வீடியோ :

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com