“சிம்புவுடன் சேர்ந்து நடிக்கிறீர்களா?” - ‘நான் ஈ’ சுதீப் விளக்கம்
சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி குறித்து நடிகர் சுதீப் விளக்கம் அளித்துள்ளார்.
‘நான் ஈ’ மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் அழுத்தமான அடையாளத்தை ஏற்படுத்தியவர் நடிகர் கிச்சா சுதீப். இவர் சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்தது. இந்தப் படம் ஆரம்பித்தது முதல் சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் லேசான உரசல் இருந்தது. இடையில் இந்தப் படத்திலிருந்து சிம்புவை நீக்கிவிட்டதாகவும் தயாரிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். பின் தயாரிப்பாளர் சங்கம் தலையீட்டின் படி மீண்டும் சிம்பு நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது.
படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. வரும் ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. இதனிடையேதான் கன்னட நடிகர் கிச்சா சுதீப், இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கசிந்தது. சுதீப், இந்தக் கதையை கேட்டு மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் ஆகவே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளிவருவது உண்மையா என ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த சுதீப், “இது தவறான செய்தி” எனக் கூறியுள்ளார். இதனால் சுதீப், இப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு, இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இப்போது உள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். வி ஹவுஸ் இதனை தயாரிக்கிறது. இது ஒரு அரசியல் த்ரிலர் திரைப்படமாக உருவாக உள்ளது.