"அவர்தான் என் உயிரைக் காப்பாற்றினார்.." - நெகிழ்ச்சியாக சொன்ன KGF இசையமைப்பாளர் | Ravi Basrur
கன்னட திரையுலகில் பிரஷாந்த் நீல் இயக்கிய `உக்ரம்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரவி பஸ்ரூர். இவர் பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் `K.G.F' படத்தின் இரு பாகங்களுக்குப் பிறகு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றார். இப்போது விஷ்வக் சென் இயக்கி நடித்துள்ள `CULT' என்ற தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அப்பட டீசர் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட ரவி பஸ்ரூருக்கு, நடிகர் விஷ்வக் சென் Rolex கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்தார்.
ரவி பஸ்ரூர் பேசியபோது, "நான் 25 வருட பணி அனுபவத்தைக் கொண்டுள்ளேன். எனக்குள் இருக்கும் திறமை, பல இடங்களில் நான் 24 மணிநேரம் இசைக்கலைஞராகப் பணியாற்றியுள்ளேன். அப்படி பணியாற்றினால்தான், நல்ல இசையைக் கொடுக்க முடியும். என்னை ரவி பஸ்ரூராக அல்லாமல், என்னுடைய ஆன்மாவை ஒருவர் பார்த்திருக்கிறார் என்பதில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி. அவர் என் ஆன்மாவைப் பாராட்டியுள்ளார். இசையின் மீது எனக்கு இருக்கும் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார். இது வெறும் வாட்ச் மட்டுமல்ல, பல இசைக்கலைஞர்களுக்கான பாராட்டு.
என்னுடைய 18ஆவது வயதில், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். எல்லோரும் இங்கு பணத்துக்கே மதிப்பு கொடுக்கிறார்கள். இந்த உலகம் வேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால் இருமுறையும் என்னைக் காப்பாற்றிவிட்டனர். இரண்டாவது முறை என்னைக் காப்பாற்றியவர், கீ-போர்ட் வேண்டும் என்ற என் கதறலுக்குச் செவி சாய்த்தார். கீ-போர்ட் வாங்கிக்கொள்ள 35,000 ரூபாய் கொடுத்தார்.
அன்று என்னுடைய பெயரை ’ரவி’ என மாற்றினேன். அதுதான் என்னை காப்பாற்றியவருடைய பெயர். நான் சாகும்வரை, என்னை ரவி என நீங்கள் அழைப்பீர்கள் அல்லவா. அந்த கிரெடிட் எல்லாம் அவருக்குப் போக வேண்டியது. இரண்டாவதாக விஷ்வக் சென் என்னை அடையாளம் கண்டார். நான் இந்த இருவரையும் மறக்க மாட்டேன்" என்றார்.

