ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு.. நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்..கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகை லட்சுமி மேனனை செப்டம்பர் 17ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமி மேனன், தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், வேதாளம், ரெக்க, கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றிருக்கிறார். தமிழ் மண்ணுக்கே உரிய முகமாக பார்க்கப்பட்ட லட்சுமி மேனனை, தமிழ் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், கேரளாவில் பார் ஒன்றில் ஏற்பட்ட தகறாரில் ஐடி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில், லட்சுமி மேனன் தேடப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் நேற்று வெளியானது.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றில், ஆகஸ்ட் 25ம் தேதி இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. ஐடி ஊழியர் உட்பட ஒரு கும்பலுக்கும், நடிகை லட்சுமி மேனன் மற்றும் நண்பர்கள் அடங்கிய கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ஐடி ஊழியர் தனது காரில் ஏறி புறப்பட முயன்றபோது, லட்சுமி மேனனின் நண்பர்கள் அடங்கிய கும்பல், ஐடி ஊழியரை தங்கள் காருக்குள் ஏற்றி கடத்திச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஐடி ஊழியர், கொச்சியில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தன்னை காரில் கடத்திச் சென்று அடித்துவிட்டு இறக்கிவிட்டுச் சென்றதாக குறிப்பட்டுள்ளார். புகாரின் பேரில் லட்சுமி மேனனின் குழுவினர் மிதுன், அனிஷ், சோனா ஆகிய மூவர் கைதாகியிருப்பதாக கேரள காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
புகார் தாரர் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமி மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவானதாக தெரிகிறது.இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நடிகை லட்சுமி மேனனை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி அவரது தரப்பு கேரள உயர் நீதிமன்றத்த்தில் வழக்கு பதிவு செய்தது.. இதையடுத்து இன்று நடிகைக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என்றும் நடிகை லட்சுமி மேனனை செப்டம்பர் 17ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..