‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட தடை விவகாரம்.. கேரள நீதிமன்றத்தில் முறையீடு!
’தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள போதிலும், பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சுதீப்தோ சென் இயக்கத்தில் 2023இல் வெளியான இந்திப் படம் `தி கேரளா ஸ்டோரி'. மாற்று மதத்தினரை, முஸ்லீம்களாக மாற்றுகின்றனர் என்ற கருத்தை முன்வைத்த இந்தப் படம் மிகப்பெரிய விவாதங்களை எழுப்பியது. இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதிலும் பெண்களைக் காதலித்து, அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றுகிறார்கள் என்ற கருத்துதான் இடம் பெற்று இருந்தது. மேலும் இஸ்லாமிய பெண்கள் சேர்ந்து ஓர் இந்துப் பெண்ணின் வாயில் மாட்டிறைச்சியைத் திணிப்பது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த ட்ரெய்லர் குறித்து பலரும் எதிர்கருத்துகள் தெரிவித்து வந்த நிலையில், அப்படம் குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
’தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள போதிலும், பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் கதையம்சம் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, திரைப்படத்தை வெளியிட 15 நாட்களுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் நேற்று உத்தரவிட்டார். படத்திற்கு சான்றிதழ் வழங்கியதில் சென்சார் போர்டு சரியான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், சட்டத் தேவைகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்தபோதிலும் ஆன்லைன் தளங்கள் மற்றும் சில திரையரங்குகளில் டிக்கெட்முன்பதிவு இன்னும் செயலில் உள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் படம் திரையிடப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். தடையை மீறி படம் திரையிடப்பட்டால், அதுகுறித்து ஆய்வு செய்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்போவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா தரப்பில் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நிலுவையில் உள்ளது. "சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்குள் வராது" என நீதிமன்றம் இந்தத் தடையின்போது குறிப்பிட்டது.

