நடிகை பாவனா கடத்தப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப் மற்றும் காவ்யா மாதவன் ஆகியோர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கேரள போலீசார் கூறியுள்ளனர்.
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி காரில் வந்துகொண்டிருந்தபோது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, காரில் மானபங்கப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக, பல்சர் சுனி என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பல்சர் சுனியின் கூட்டாளி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், திலீப்பிடமும், அவருடைய மேலாளர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர் ஷா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, பாவனாவை பாலியல் தொல்லை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, காவ்யா மாதவன் நடத்தும் கடையில் கொடுத்ததாக பல்சர் சுனி தெரிவித்தான். அதன்பேரில், காவ்யா மாதவன் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், பல்சர் சுனி, பாவனாவை கடத்துவதற்கு முன்பு, அடிக்கடி தொடர்பு கொண்ட தொலைபேசி எண்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த எண்கள், திலீப்புக்கு வேண்டியவர்களின் எண் என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், சிறையில் இருந்தபடி, திலீப் மேலாளருடன் பல்சர் சுனி சிலமுறை பேசி உள்ளான்.
நடிகர் திலீப்புடன் பல்சர் சுனி நிற்பது போன்ற புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. இதையடுத்து போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பாவனா வழக்கில், தொடர்புடைய நபர்களை கைது செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோர் எந்த நேரமும் கைதாவார்கள் என்று தெரிகிறது