நடிகை காவ்யாவை கைது செய்ய மாட்டோம்: போலீஸ் தகவல்
கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டமில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது முன்ஜாமின் விசாரணை மனு முடித்து வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் பல்சர் சுனி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பல்சர் சுனில் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் விசாரணை செய்ததில், நடிகர் திலீப்புக்கு இதில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. அவரும் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திலீப்பின் மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கும் இந்த கடத்தலில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யும் வாய்ப்புள்ளதாக கருதிய காவ்யா மாதவன் முன்ஜாமின் வழங்கக்கோரி கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு நேற்று வந்தது.
இந்த நிலையில் காவ்யா மாதவனை குற்றவாளியாக சேர்க்கவில்லை என்றும் அவரை கைது செய்யும் திட்டமில்லை என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.இதனையடுத்து அவரது முன்ஜாமின் விசாரணை மனு முடித்து வைக்கப்பட்டது.