“ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுகிறார் விசு” - நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை குறித்து ’கவிதாலயா’

“ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுகிறார் விசு” - நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை குறித்து ’கவிதாலயா’
“ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுகிறார் விசு” - நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை குறித்து ’கவிதாலயா’

இயக்குநர் விசு கிளப்பி இருந்த சர்ச்சை குறித்து கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் பல வெற்றி படங்களை இயக்கியவர் விசு. மேலும், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் எனப் பல அடையாளங்கள் இவருக்கு உண்டு. இவர் இயக்கத்தில் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ மாபெரும் வசூலை ஈட்டியது. இவர் சமீபத்தில் ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருந்தார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தனது படங்களின் ரீமேக் உரிமையை தன்னைக் கேட்காமல் விற்பனை செய்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்ய நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டியதாக வெளியான தகவலை தொடர்ந்து இந்தச் சர்ச்சை தொடங்கியது. இப்படத்தினை மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். ‘நெற்றிக்கண்’ ரீமேக் குறித்த செய்தி உண்மையாக இருந்தால், தனது சொந்தக் கதைக்காக தன்னிடமும் தனுஷ் அனுமதி பெற வேண்டும் என்ற கோணத்தில் விசு கருத்து தெரிவித்திருந்தார். ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சை உருவாகியது.

இந்நிலையில் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் இந்தச் சர்ச்சை குறித்து இப்போது ஒரு விளக்கத்தை கூறியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கவிதாலயா, தமிழ் திரையுலக ஜாம்பவான் கே.பாலச்சந்தரால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக் காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால், ஒருபோதும் இந்நிறுவனம் விதி மீறல்களுக்கு இடமளித்ததில்லை. கவிதாலயா எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது.

இந்நிலையில், ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம். ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழுக் காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில், இயக்குநர் விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு.

கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com