பஞ்சு மிட்டாய், தூதுவளை இலை அரைச்சு| ”இளையராஜா, தேவா போல ஒருவர் கூட இல்லையா?” - கஸ்தூரி ராஜா காட்டம்
பூவாயி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சாமக்கோடாங்கி என்ற திரைப்படத்தை இயக்க உள்ள இயக்குநர் கஸ்தூரிராஜா சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ”பஞ்சு மிட்டாய் சேலை கட்டி, ஒத்த ரூபா தாரேன், தூதுவளை இலை அரைச்சு என தன் படத்தில் வந்த படால்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு மரியாதைக்கு கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை என்றும், இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இக்கால இயக்குநர்களுக்கு வேலைவாங்க தெரியவில்லை..
இளையராஜா, தேவா போன்ற படைப்பாளர்கள் இல்லை என்பதால் பழைய படால்களை பயன்படுத்துவதாக தெரிவித்த கஸ்தூரிராஜா, படைப்பாளர்களை வேலை வாங்குவது ஒரு தனித்துவமானது. இக்கால இயக்குநர்களிடம் அந்த வழக்கம் இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.
சினிமா என்பது ஒரு நல்ல தொழில், இதில் திட்டமிடுதல் தேடுதல் எதுவும் தற்போது இல்லை. ஒரு அறையில் அமர்ந்து எந்த படத்தில் வரும் காட்சிகளை நமது படத்திற்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து மட்டுமே பேசுகிறார்கள்.
தமிழ்திரையுலகில் பாடலாசரியர், வசனகர்த்தா, கதாசிரியர்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மண்சார்ந்த கதைகளுக்கு பஞ்சமில்லை. தமிழ்பண்பாட்டில் மாமன், மச்சான் , அண்ணன், தம்பி என உறவுகள் என்றும் மண்ணைவிட்டு மறையாதது. இளம் இயக்குனர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் படம் எடுக்கிறார்கள். இதனால் நூற்றுக்கு 99 படங்கள் தோல்வியை தழுவுகின்றன.
தற்போது வெளியாகியுள்ள "மாமன்" "டூரிஸ்ட் பேமிலி" போன்ற படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும்.
திரைப்படத்திற்கு என ஒரு மொராலிட்டி உள்ளது. அது தற்போது பின்பற்றப்படுவதில்லை. புத்தகங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் நாகரீகம் கருதி சில வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதில்லை. அப்படி திரைப்படங்களிலும் கட்டுப்பாடுகள் வேண்டும். திரைப்படங்களில் தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்து நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்றார்.
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிப்பதாக வெளிவந்துள்ள தகவல் குறித்து கருத்து தெரிவித்த கஸ்தூரிராஜா, அப்துல் கலாம் உயிரில் கலந்த மனிதர் அவரது கதாபாத்திரத்தில் என் மகன் நடிப்பது பெருமையான விஷயமாக கருதுவதாக கூறினார்.