தரமான, சிறப்பான சம்பவங்களை இனி உங்ககிட்ட எப்போ பார்க்கப் போறோம் கார்த்திக்? `மகான்’ எப்படி

தரமான, சிறப்பான சம்பவங்களை இனி உங்ககிட்ட எப்போ பார்க்கப் போறோம் கார்த்திக்? `மகான்’ எப்படி
தரமான, சிறப்பான சம்பவங்களை இனி உங்ககிட்ட எப்போ பார்க்கப் போறோம் கார்த்திக்? `மகான்’ எப்படி

ஜகமே தந்திரம் தந்த ஏமாற்றத்தை கார்த்திக் சுப்புராஜ் சரிகட்டுவார் என்றும், கடாரம்கொண்டான், சாமி ஸ்கொயர் தந்த ஏமாற்றத்தை விக்ரம் சரி கட்டுவார் என்றும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படம் ‘மகான்’. திரையரங்கில் வெளியாகாது என்ற செய்தி மீண்டுமொரு ஏமாற்றம் என்றாலும் அமேசானில் வெளியாகிறது என்றதும் டீசரைப் பார்த்து உற்சாகமாக இருந்தது சமூக வலைதளம். நாம் நடத்திய ஆன்லைன் போலிலும் இது விக்ரமுக்கு பிளாக்பஸ்டர் ஆக இருக்குமென்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்திருந்தார்கள். நேற்று இரவு அமேசான் ப்ரைமில் வெளியான மகான் எப்படி இருந்தது? பார்க்கலாம்.

ஸ்பாய்லர் இல்லாமல் கதைக்களத்தைச் சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம். காந்தி ஃபாலோயர்ஸ் மட்டுமே இருக்கும் குடும்பத்தில் பிறந்த விக்ரம், 40 வயது வரை எந்த தீயப் பழக்கங்களும் இல்லாமலே வாழ்கிறார். ஒரே ஒரு நாள், தன் 40வது பிறந்த நாளில் தன் எல்லை மீறும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்க, அது அவர் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அங்கிருந்து திசைமாறும் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வந்து நிற்கிறார் அவர் மகன் துருவ் விக்ரம். ‘ஏன்னா கலெக்டர் என் தம்பி’ என செய்வதறியாது கலங்கி நின்றாரே ‘தளபதி’ பட சூர்யா ரஜினி, அப்படி நிற்கிறார் விக்ரம். முடிவு என்ன ஆனது, யார் யார் மகான் ஆனார்கள் என்பதே கதை.

ஒரே ஒரு ஃப்ரேமில் கூட காந்தி மகான் கேரக்டரை விட்டு விலகாத நேர்த்தியான நடிப்பை மீண்டும் தந்திருக்கிறார் சீயான். வயது ஏறுவதை காட்டும் உடல்மொழி, வாழ்க்கை மாறுவதைக் காட்டும் உடல்மொழி, விருப்பங்களும் வாய்ப்புகளும் மாறும் மாறுவதைக் காட்டும் உடல்மொழி என விக்ரமின் உழைப்பும் திறமையும் உச்சி முகர வைக்கிறது. நிச்சயம் நடிப்பு மகான் விக்ரம் தான். அப்பாவுடன் வீட்டைப் பகிர்ந்துகொண்ட துருவ், திரையைப் பகிர்ந்துகொண்டிருப்பது சுவாரஸ்யம். மிரட்டலான குரலும் உடலும் இருந்தாலும் ‘ச்சோ ஸ்வீட்’ முகம்தான் ஒன்ற மறுக்கிறது. 16 அடி பாயாவிட்டாலும் அப்பாவுடன் அதே வேகத்தில் ஓடியதே வெற்றிதான் குட்டி விக்ரம்.

இவர்களைத் தாண்டி கவனம் ஈர்ப்பது சனத் தான். விக்ரமுடனான அவர் பிணைப்பைத் தனியே எடுத்து பார்த்தால் அவ்வளவு சுவாரஸ்யம். அதற்கு ஏற்ற நடிப்பைத் தந்திருக்கும் சனத்தை கோலிவுட் இன்னும் அதிகமாய் பயன்படுத்தலாம். தியேட்டரில் கேட்டாலே சரியாகக் கேட்காத பாபி சிம்ஹா குரலை, ஓடிடியில் கேட்பது கொஞ்சம் சிக்கல்தான். என்ன பேசுகிறார் எனப் புரியாத குரலும், அதற்குப் பொருந்தாத அவர் உடல்மொழியும் சின்ன மைனஸ்தான். நன்றாக எழுதப்பட்ட அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கவில்லை பாபி சிம்ஹா. சிம்ரன் உட்பட இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவை கதாபாத்திரங்களாக சிக்கலானவை என்பதால் மனதில் தங்கவில்லை.

எதிர்பார்ப்பைக் கூட்டும் ஐடியாவைதான் கார்த்திக் ஒவ்வொரு முறையும் பிடிக்கிறார். அது நடிகர்களை ஒகே சொல்ல வைக்கத்தான் பயன்படும். ரசிகர்களுக்கு அந்த ஹைப்பே, முழுமையடையாத கண்டெண்ட் கிடைக்கும்போது நெகட்டிவ் ஆகிவிடும். அப்படி ஒரு சிக்கலில்தான் பெரும்பாலும் கார்த்திக் மாட்டிக்கொள்கிறார். ‘தரமான, சிறப்பான சம்பவங்களை இனி உங்கக்கிட்ட பாக்கவே முடியாதா கார்த்திக்?’ என்றுதான் தோன்றுகிறது. ஆனாலும், மகான் அவர் மீது மீண்டும் நம்பிக்கை வைக்கும் கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பதுதான் ஒரே ஆசுவாசம்.

மகானின் அப்பா காந்தியவாதி. ஆனால், 10 வயது மகன் தவறு செய்தால் முதுகு தோலை உரிக்கிறார். சிறு வயதில் ஒன்றாக விளையாடிய சிறுவர்கள், திரைக்கதைக்குத் தேவைப்படும்போதெல்லாம் ஒவ்வொருத்தராக தாமாக அறிமுகம் ஆகிக் கொள்கிறார்கள். ஒருவேளை திரையரங்கில் பார்த்திருந்தால் பக்கத்து சீட்காரர் எழுந்து ‘என்ன தெரியலையா காந்தி மகான்? நாந்தான் ரவி. சீட்டு ஆடுவோமே!” எனப் போய்விடுவாரோ என்ற பயமே எழுந்திருக்கும். அந்த அளவுக்கு ‘ஈஸி’ ஆக திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். நண்பனுக்கு எம்.எல்.ஏ சீட் ஒகே. அவர் அமைச்சர் ஆவதும் கூட ஒகே. துணை முதல்வர் ஆவதும், துணை முதல்வரை விடிவதற்குள் போட்டுவிடுவேன் என பாபி சிம்ஹா கர்ஜிப்பதும், ‘முடிச்சிடலாம்’ என் விக்ரம் சொல்வதும்…. எந்த உலகத்தில் கதை நடக்கிறது? நினைத்த நேரத்தில் புதிய சாராய பிராண்ட் தொடங்குகிறார்கள், தமிழகம் முழுவதும் இவர்கள் பார்தான் நடத்துகிறார்கள், முதல் முறை குடிக்கும் விக்ரம் பதினொன்னே முக்கா லிட்டர் குடிக்கிறார்.

அதைவிட கொடுமை காந்தியை இவர்கள் டீல் செய்த விதம்தான். இருக்கும் எல்லா தவறுகளையும் செய்யும் விக்ரமும் பாபி சிம்ஹாவும் ‘என் பையன் என்ன தப்புடா செஞ்சான், நாம என்ன தப்புடா செஞ்சோம், நம்ம பக்கத்து வீட்டுக்காரன் என்னடா செஞ்சான்?” எனக் கேட்பதெல்லாம்.. ஏலத்தில் ஃபோர்ஜரி செய்யும் விக்ரமை அடக்க நினைக்கும் அதிகாரியைக் கொன்றதெல்லாம் புண்ணியமா கார்த்திக்? கடைசியில் தனது டிரேட்மார்க் டிவிஸ்ட் வேண்டுமென செய்திருப்பது சுவாரஸ்யம்தான். ஆனால், எடுத்துக் கொண்ட ‘காந்தி மகான்’ கான்செப்ட்க்கு அது என்ன முடிவு? விவசாயிக்குப் பிறகு எல்லா பருவமும் உழைப்பு வீணாகும் நபர் விக்ரம்தான்.

'எப்டிவேணா ஜாலியா வாழலாம்னு நினைக்கிற  நான் ஒரு எக்ஸ்டீரீம்.  கொள்கை கொள்கைனு பிடிச்சு தொங்கி நேர்  எதிரா  நிக்கிற துருவ் ஒரு எக்ஸ்ட்ரீம்' போன்ற ஷார்ப் வசனங்களும் நன்று.

சந்தோஷ் நாராயணின் இசை ரிப்பீட் மோடில் கேட்ட காலம் போய், ரிப்பீட் மோடில் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த ஃப்ரேமில் நிறுத்தினாலும் பின்னால் ஒரு ட்யூப் லைட் ‘டமுக்கு டிம் டமுக்கு டிம்’ என மின்னிக் கொண்டேயிருக்கிறது. பட்ஜெட் பிரச்னையே தெரியாத படத்தில் வோல்டேஜ் பிரச்னை நன்றாகத் தெரிகிறது. விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் விக்ரம் போல் வேலை செய்திருந்தால் 20 நிமிடங்கள் முன்பாகவே இந்த பதிவை நீங்கள் படித்திருக்கலாம்.

சோறு வாங்கி, அதில் ரசத்தையும் சாம்பாரையும் அவியலையும் சேர்த்து சாப்பிடுவது ஒருவரின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் விற்பவர் அப்படிக் கொடுக்கலாமா? மகான் அப்படி ஒரு குழப்பமாக இருக்கிறது.

யார்தான் இதில் உண்மையான மகான் என யோசித்தால் 2.45 மணி நேரம் இதைப் பார்த்து முடித்த ரசிகர்களைத்தான் சொல்ல வேண்டியிருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com