‘ரோலக்ஸ் ரோலக்ஸ்’ என ஆர்ப்பரித்த ரசிகர்கள் - சமாதானப்படுத்திய சூர்யா

‘ரோலக்ஸ் ரோலக்ஸ்’ என ஆர்ப்பரித்த ரசிகர்கள் - சமாதானப்படுத்திய சூர்யா
‘ரோலக்ஸ் ரோலக்ஸ்’ என ஆர்ப்பரித்த ரசிகர்கள் - சமாதானப்படுத்திய சூர்யா

கார்த்தியின் ‘விருமன்’ பட இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்று வரும்நிலையில், நிகழ்ச்சியை துவங்கவிடாமல் ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தி கூச்சலிட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது.

‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளப் படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தென் மாவட்டங்களான மதுரை, தேனி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் இன்று மாலை துவங்கியுள்ளது. இந்த விழாவுக்கு இயக்குநர் ஷங்கர், பாரதிராஜா, சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர், சிங்கம் புலி, சூரி, ரோபோ சங்கர், ஆர்.கே. சுரேஷ், கருணாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். ஏற்கனவே ஆஸ்கர் நாயகனே, தேசிய விருது நாயகனே என்று கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் நிகழ்ச்சியை துவங்க விடாமல், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ரசிகர்கள் ரோலக்ஸ், ரோலக்ஸ் என்று கத்தி கூச்சலிட்டனர். கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சில நிமிடங்களே வந்து நடிகர் சூர்யா மிரட்டியிருந்தார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் இவ்வாறு கத்திக்கொண்டே இருந்தனர். இதனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள் நீங்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியும் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

ஆனாலும் கூச்சல் நின்றபாடில்லை. பின்பு சூர்யா எழுந்து ரசிகர்களை பார்த்து ‘உங்களுக்காக வந்திருக்கோம், உங்க இடத்துக்கு வந்திருக்கோம். மேடையில் நானும் வருவேன். கார்த்தியும் வருவாரு, அதுவரைக்கும் பொறுமையா அவங்கள கொஞ்சம் பேச விடுங்க, உங்களோட அமைதி வேணும்னு கேட்டுக்கிறேன்” இவ்வாறு சூர்யா தெரிவித்தப் பின்னரும் ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

பின்னர் மேடைக்கு பேச வந்த தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ், ரசிகர்களுக்கு ஏற்றவாறு ரோலக்ஸ் ரோலக்ஸ் என்று அவர் பங்குக்கு ஆர்ப்பரித்து விட்டு, இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் வெளியான ‘மருது’ படத்தில் ரோலக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்ததை நினைவுக்கூர்ந்தார். பின்பு, அந்த கதாபாத்திரமே தனக்கு மறந்துவிட்டதாகவும், சூர்யாவின் நடிப்பு ‘விக்ரம்’ படத்தில் மிரட்டலாக இருந்தாகவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com