”பரியேறும் பெருமாள் போல் ’கர்ணன்’ ஒதுங்கிப் போக மாட்டான்” தெறிக்கவிடும் மாரி செல்வராஜ்

”பரியேறும் பெருமாள் போல் ’கர்ணன்’ ஒதுங்கிப் போக மாட்டான்” தெறிக்கவிடும் மாரி செல்வராஜ்
”பரியேறும் பெருமாள் போல் ’கர்ணன்’ ஒதுங்கிப் போக மாட்டான்” தெறிக்கவிடும் மாரி செல்வராஜ்

எப்போதுமே இந்தியா சினிமாக்களை பொறுத்தவரை நம்முடைய இதிகாசங்கள் படைப்பாளிகளுக்கு பொக்கிஷமானவை. அதுவும் "மகாபாரதம்" இந்த நாட்டின் தொன்மையான இதிகாச பொக்கிஷங்களில் ஒன்று. "மாகாபாரத" கதைகளில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்துவிடலாம். மேலும் அந்தக் கதாப்பாத்திரத்தின் பாதிப்பை வைத்து நாம் வேறு கதையை எழுதி திரைப்படமாகவும் கொடுத்துவிடலாம். அந்த அளவுக்கு கதாப்பாத்திரங்களுக்கான ஆழம் மகாபாரதத்தில் உண்டு.

மகாபாரதத்தில் முக்கிய பாத்திரங்களை தவிர சட்டென நம் அனைவரின் நினைவுக்கு வரும் பெயர் "கர்ணன்". மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு இணையான கதாப்பாத்திரம் கர்ணனுடையது. இன்னும் சரியாக சொல்லப்போனால் அர்ஜூனனின் கதாப்பாத்திரத்துக்கும் மேலானது கர்ணனின் பாத்திரப்படைப்பு என இலக்கியவாதிகள் சொல்வார்கள். கெளரவர்கள் அதர்மகாரர்கள்தான் என்றாலும் அந்தக் கூடாரத்தில் இருக்கும் ஒரே நல்லவர் கர்ணன் மட்டுமே. மேலும் கர்ணன் ஒரு கொடை வள்ளல். நட்புக்காக உயிரையே கொடுப்பவன். அதனால்தான் நல்லவனாய் இருந்தாலும் அதர்மக்காரர்கள் பக்கம் நின்றதால், குருஷேத்திர யுத்தத்தில் சூழ்ச்சி செய்யப்பட்டே கொல்லப்பட்டான் கர்ணன் என்று நியாயம் கற்பிக்கிறது மகாபாரதம்.

இவ்வாறு மிகவும் வலுவான கதாப்பாத்திரம் கர்ணனுடையது. வீரத்தால் கொல்லப்படாமல் மறைமுகமாக கொல்லப்பட்டதால்தான் கர்ணன் கதாப்பாத்திரம் இன்னும் நம்மிடைய போற்றப்பட்டு வருகிறது. அதனால்தான் இப்போதும் இந்திய திரையுலகத்தில் கர்ணன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு பல முன்னணி கதாநாயகர்களே தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் என்னவோ 1964 இல் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்து வெளியான "கர்ணன்" திரைப்படம் இப்போதும் காலத்தால் அழியாத காவியமாக இருக்கிறது. மேலும் "கர்ணன்" திரைப்படம் ஒருவன் பிறப்பையும், ஜாதியையும் கேள்விக் கேட்டது. அதுதான் அந்தப் கதாப்பாத்திரத்தின் தன்மையும் கூட. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு "கர்ணன்" திரைப்படம் டிஜிட்டல் முறையில் தமிழகம் முழுவதும் ரீரிலீஸ் செய்யப்பட்டது. அப்போதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 1991 இல் வெளியான "தளபதி" திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரப்படைப்பும் மகாபாரத கர்ணனுடையதே. இதில் மலையாள நடிகர் மம்முட்டியை துரியோதனாகவும், ரஜினியின் கதாப்பாத்திரம் கர்ணனாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதிலும் நட்புக்கும் மரியாதையும் கொடை வள்ளலாகவும், வீரனாகவும் ரஜினியின் கதாப்பாத்திரம் இருக்கும். இது நவீன காலத்திரைப்படம் என்பதால் கதையின் முடிவில் மட்டும் மாறுதல்களை செய்திருப்பார் இயக்குநர் மணிரத்னம். ஆனால், முழுக்க முழுக்க தளபதியில் வரும் ரஜினியின் கதாப்பாத்திரமான "சூர்யா" கர்ணனை ஒட்டியே வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட தவிர்க்க முடியாத கதாபாத்திரம் "கர்ணன்".

இப்போது மீண்டும் "கர்ணன்" பேசுபொருளாகி இருக்கிறார். ஆம் கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கிறது "கர்ணன்". எப்போதும் போல இந்தப் பெயருக்காகவே இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. மேலும் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு முந்தையப் படமான "பரியேறும் பெருமாள்" சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும் இதற்கு முக்கியக் காரணம். "கர்ணன்" என்று பெயர் வைத்ததாலோ என்னவோ மகாபாரத கர்ணன்போன்றதுதான் தனுஷின் கதாப்பாத்திரமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

கர்ணன் படம் தொடர்பாக ஏற்கனவே போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில், தனுஷ் பிறந்த நாளையொட்டி சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகி இருந்தது. அதில், நாதஸ்வர இசையுடன் படப்பிடிப்பு தளம் உருவாகும் விதத்தை காட்சிப்படுத்தி இருக்கும். இறுதியில் தனுஷின் ஒரு காட்சி மட்டும் சில நொடிகள் வரும். ஏற்கனவே வெளியான போஸ்டர்களிலும் சரி, இந்த காட்சியிலும் சரி சூரிய ஒளியோடு தனுஷ் இருப்பது போல் தான் இருக்கும். இந்த வீடியோவிலும் தனுஷ் வால் பிடித்து ஆக்ரோஷமாக நிற்பது போலவும், வானமெல்லாம் ரத்த கறையாக மாறுவது போலவும் இருக்கும். மகாபாரத்தில் வரும் கர்ணனுக்கும் சூரியனுக்கு உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே. இதனால், மகாபாரத கதையின் தாக்கம் கர்ணனில் நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து நேரடியாகவே படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிடம் பேசினோம் அப்போது அவர் "புராண காலத்து கர்ணன் கதாப்பாத்திரத்துக்கும், தனுஷின் கதாப்பாத்திரத்துக்கும் இதில் எந்தச் சம்பந்தமும் கிடையாது. "கர்ணன்" என்ற பெயர் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் வழக்கமாக வைக்கும் பெயர்தான் ஒழிய வேறு எந்தச் சம்பந்தமும் இல்லை. "பரியேறும் பெருமாள்" படத்தின் நாயகன் போல இத்திரைப்படத்தில் தனுஷ் ஒதுங்கி போகமாட்டார், நியாயத்துக்காக குரல் கொடுப்பதிலும் உரிமைகளை போராடி திரும்பப்பெறும் கதாப்பாத்திரமாகவே இந்தக் கர்ணன் இருப்பான்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com