ஷாருக்கானின் புதிய படத்தை இயக்குகிறார் அட்லீ?

ஷாருக்கானின் புதிய படத்தை இயக்குகிறார் அட்லீ?

ஷாருக்கானின் புதிய படத்தை இயக்குகிறார் அட்லீ?
Published on

 பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் புதிய படத்தை இயக்குநர் அட்லீ இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார் அட்லீ என்று தகவல் கசிந்தது. ஆனால் அந்தத் தகவல் வதந்தி என்ற அளவிலேயே நின்றுவிட்டது. இப்போது அந்த வதந்தி மீண்டும் செய்தியாக மாறி இருக்கிறது. இந்த முறை நம்பக்கூடிய அளவுக்கு அந்தச் செய்தி முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஆம்! பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘பிகில்’ இயக்குநர் அட்லீ ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தப் படம் கமர்ஷியல் பொழுதுப்போக்கு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கரண் ஜோஹருடைய ‘தர்மா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் கிரியேட்டிவ் பக்கம் உள்ள அனைத்து வேலைகளையும் அட்லீ கவனிக்க இருப்பதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக அட்லீ, ஏற்கெனவே ஷாருக்கானை சந்தித்து கதையையும் விவரித்திருக்கிறார். அந்தக் கதை ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்துவிட்டதாக தெரிகிறது. மேலும் முழுக் கதை ஸ்கிரிப்டையும் ஷாருக்கான் வாங்கி படித்தும் பார்த்துள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளில் உருவாகலாம் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் 2021 தொடக்கத்தில் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஷாருக்கான், தற்போது ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்னா டிகே ஆகியோர் படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்திலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதனை அடுத்து அட்லீயின் படம் வேகம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தச் செய்தியை படக்குழுவோ அல்லது தயாரிப்பு நிறுவனமோ இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com