‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவை பாராட்டிய கரண் ஜோகர்...!
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு, வித்தியாசமான முறையில் தலைப்பை வெளியிட்டதற்கு பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான கரண் ஜோகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நானும் ரௌடிதான்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இதுகுறித்து கடந்த 14-ஆம் தேதி விக்னேஷ் சிவன், நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும், கூடுதல் சிறப்பாக நடிகை சமந்தாவும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக இணைந்துள்ளார்.
இப்படத்தின் தலைப்பை புதுமையான முறையில் படக்குழு அறிவித்திருந்தனர். அனிருத்தின் துள்ளலான இசையில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்த அந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான கரண் ஜோகரும் இந்த வீடியோவை வியந்து பாராட்டியுள்ளார். மிகவும் புதுமையான முறையில் இந்த வீடியோ இருந்ததாக படக்குழுவினருக்கு கரண் ஜோகர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.