காப்பான் படத்துக்கு தடையா ? பட நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
காப்பான் படத்துக்கு தடை கோரிய வழக்கில் பட நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பணியாற்றி, பல கதைகளை எழுதியுள்ளதாகவும், 2014-2016-ம் ஆண்டுகளில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். கதையில், பத்திரிகை நிருபரான கதாநாயகன் இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதிநீர் இணைப்பு மற்றும் நதி நீர் பொது பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைக்கும் விதத்தில் கதை இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். அந்த கதையை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறியதாகவும், ஆனால், அவருக்கு நேரம் இல்லை என்பதால், அதன்பின்னர் பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்திடம் கதையை விரிவாக கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
கதையை நன்றாக உள்வாங்கிக் கொண்ட ஆனந்த், எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது தனக்கு வாய்ப்பு தருவதாக உத்தரவாதம் அளித்ததால், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தன்னுடைய ‘சரவெடி’ கதையை காப்பான் என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியதுடன், அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கான விளம்பரங்கள் வெளியானபோது, நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீடு குறித்தும், விவசாயம் குறித்தும் பிரதமருக்கு பத்திரிகையாளராக நடித்துள்ள ஹீரோ விளக்கம் அளிப்பது போல் உள்ளதால், தன்னுடைய கதையை தலைப்பை மாற்றி எடுத்துள்ள இந்த காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பட நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி தான் வெளியாக உள்ளதால், படத்துக்கு தடை எதும் விதிக்க வேண்டாம் எனவும், பதில் மனுத்தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தனர். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி விசாரணையை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.