கர்நாடகா | ‘காந்தாரா’ பட நடிகர் மாரடைப்பால் மரணம்
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன.
நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், கன்னட நடிகர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ராகேஷ் புஜாரி (33). ‘காந்தாரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இவர், அதன் பாகம் 2விலும் தற்போது நடித்துவந்தார். ’காமெடி கிலாடிகள்’ என்ற ரியாலிட்டி ஷோவின் சீசன் 3-ன் வெற்றியாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், உடுப்பியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் ராகேஷ் புஜாரி கலந்துகொண்டார். அந்த விழாவில் தமது நண்பர்களுடன் அவர் மேடையில் உற்சாகம் பொங்க, நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நெஞ்சை பிடித்தபடியே சரிந்து விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ராகேஷை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறினர். ராகேஷ் புஜாரியின் திடீர் மரணம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகர் பிருத்வி அம்பர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், "எப்போதும் தூய்மையான இனிமையான புன்னகையுடன், எங்கள் இதயத்தில் நிலைத்திருப்பீர்கள். உங்கள் மறைவை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். ராகேஷ்... நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.