தங்கம் கடத்திய கன்னட நடிகை |COFEPOSAஇன் கீழ் வழக்குப்பதிவு.. ஒரு வருடத்திற்கு ஜாமீன் இல்லை!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால், கடந்த மார்ச் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நாளுக்குநாள் புது தகவல்கள் வெளியாகின. தவிர, மாநில அரசியலிலும் ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரம் புயலைக் கிளப்பியது. இந்த நிலையில், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் மீது அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA)இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரன்யா ராவுக்கு ஒரு வருட காலத்திற்கு ஜாமீன் பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்ததும் கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணை நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவில்லை எனக் காணப்பட்டாலும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீன் கூறி, அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் நடிகை ரன்யா ராவ் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் ஜாமீன் பெற பலமுறை முயற்சித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைப்புகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.