பிரபல சீரியல் நடிகரின் உடல் சடலமாக மீட்பு.. சக கலைஞர்கள் அதிர்ச்சி.. யார்? எங்கே? நடந்தது என்ன?

கன்னட மொழியில் பிரபல டிவி சீரியல்களில் நடித்து வந்த சம்பத் ராம் என்பவரின் உடல் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது.
Actor Sampath J Ram
Actor Sampath J RamRajesh Dhruva, Facebook

தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் நடிக்கும் சிலர் அவ்வப்போது தற்கொலையில் ஈடுபடுவது குறித்த செய்திகள் வருவதுண்டு. அந்த வகையில், கன்னட மொழியில் பிரபல டிவி சீரியல்களில் நடித்து வந்த சம்பத் ராம் என்பவரின் உடல் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொலைக்காட்சி கலைஞர்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

35 வயதேயான சம்பத் ராம், டிவி சீரியல் மட்டுமல்லாமல் அக்னிசாக்‌ஷி மற்றும் ஸ்ரீ பாலாஜி ஃபோட்டோ ஸ்டுடியோ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது இறப்பு செய்தியை சம்பத் ராமின் சக கலைஞரான ராஜேஷ் துருவாவின் ஃபேஸ்புக் பதிவின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

ராஜேஷ் துருவாவின் பதிவில், “உங்களது பிரிவை தாங்குமளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லை. எத்தனையோ படங்கள் உருவாக இருக்கின்றன. உங்கள் கனவை நினைவாக்குவதற்காக இன்னும் பல காலங்கள் காத்திருக்கின்றன. உங்களை பெரியத்திரையில் பார்க்க ஆவலாகவே இருக்கிறோம். தயவு செய்து திரும்பி வாருங்கள்” எனக் குறிப்பிட்டு சம்பத் ராமின் ஃபோட்டோக்களையும் பகிர்ந்திருக்கிறார்.

பெங்களூருவின் நீலமங்கலா பகுதியில் உள்ள சம்பத் ராமின் வீட்டில் இருந்தே கடந்த சனிக்கிழமையன்று (ஏப்.,22) அவரது சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் சம்பத் ராம் தனக்கென உரிய அங்கீகாரம் கிடைக்காத்தால் கடும் அதிருப்தியில் இருந்ததாக தெரிய வந்திருக்கிறது.

இதுபோக அக்னிசாக்‌ஷி படத்தின் சம்பத்துடன் நடித்திருந்த சக நடிகரான விஜய் சூரியா பேசும் போது, “அவர் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார். இதுபோன்று அவரது வாழ்வில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஒரு நடிகராக நிலைக்க வேண்டி நல்ல வாய்ப்புக்காக உழைத்துக் கொண்டிருந்தார். மிகவும் லட்சியமானவராக இருந்தார்.” என தெரிவித்திருக்கிறார்.

சம்பத் ராம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பத் ராமின் இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான என்.ஆர்.புராவில் நேற்று (ஏப்.,23) நடைபெற்றிருக்கிறது. கடந்த ஆண்டுதான் சம்பத்திற்கு திருமணம் நடைபெற்றிருந்த நிலையில், இப்படியொரு சோக முடிவு நிகழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com