அறுவை சிகிச்சையின் போது ஃபோன் செய்த கமல்.. என் அப்பா பேசியதுபோல இருந்தது! - கண்கலங்கிய சிவராஜ்குமார்
கன்னட திரையுலகைத் தாண்டி, தமிழ், தெலுங்கு என்று பலராலும் கொண்டாடப்படும் நபராக மாறியவர்தான் சிவராஜ்குமார். குறிப்பாக, தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
நடிப்பை கடந்து, அவருடைய நல்ல குணத்திற்காக கொண்டாடப்படும் சிவராஜ்குமார், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இது ரசிகர்களை கடந்து திரையுலகினருக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாக இருந்தது.
சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற அவர், ஃப்லோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கேன்சர் சிகிச்சை மையத்தில், கடந்தாண்டு டிசம்பர் 24-ம் தேதி அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 6 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட சிறுநீர் பை அகற்றப்பட்டு, குடல் பகுதியில் இருந்து செயற்கையாக சிறுநீர் பை உருவாக்கப்பட்டபிறகு தற்போது நலமாக இருந்துவருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய சிவராஜ்குமார், கமல்குறித்த பல்வேறு விசயங்களை எமோசனலாக பகிர்ந்துகொண்டார்.
கமல்சார் பேசியது என் அப்பாவை போல இருந்தது!
தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய சிவராஜ்குமார், “உங்களுக்கு எல்லாம் இது எப்படி ஒரு ஃபேன் மொமென்டோ, அதுபோலவே எனக்கும். நான் கமலஹாசன் சாரின் மிகப்பெரிய ரசிகன். ராஜ்கமல் நிறுவனத்தின் ராஜபார்வை படத்தை, என் அப்பா தான் கிளாப் செய்து துவங்கி வைத்தார். அப்போது ஏற்பட்ட தொடர்பு இன்னும் பல வருடங்களுக்கு தொடரும்.
எனக்கு ஏன் கமலஹாசனை பிடிக்கும் என தெரியாது, ஆனால் நான் இறுதிவரை அவர் ரசிகனாக தான் இருப்பேன். இப்போது கூட பாருங்கள் அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று. லவ் யூ சார். எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது, நான் டிசம்பரில் எனது சிகிச்சைக்காக மயாமியில் இருந்த போது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சிக்காகோவில் இருந்து கமலஹாசன் சார் பேசினார். உங்களிடம் தற்போது பேசியதும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது ஷிவா என அவர் கூறினார். அதை நான் மறக்கவே மாட்டேன். அது என் தந்தை என்னிடம் பேசியது போலவே இருந்தது" என்று எமோசனலாக பேசினார் சிவராஜ்குமார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் வரும் ஜுன் 5-ம் தேதி திரையில் வெளியாகவிருக்கிறது.