கன்னட சினிமாவில் 'கறார்' அதிகாரியின் பயோபிக்... யார் இந்த ஐஏஎஸ் ரோஹிணி சிந்தூரி?

கன்னட சினிமாவில் 'கறார்' அதிகாரியின் பயோபிக்... யார் இந்த ஐஏஎஸ் ரோஹிணி சிந்தூரி?
கன்னட சினிமாவில் 'கறார்' அதிகாரியின் பயோபிக்... யார் இந்த ஐஏஎஸ் ரோஹிணி சிந்தூரி?

கன்னட சினிமாவில் மீண்டும் அரசு அதிகாரிகள் வாழ்க்கை வரலாறு சினிமா மோகம் துவங்கியுள்ளது. இதற்கு மீண்டும் விதை போட்டவர், ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அவர் யார் என்பது தொடர்பான விவரங்களை சற்றே விரிவாக பார்ப்போம்.

கன்னட திரையுலகில் எப்போதும் அரசு அதிகாரிகளை மையப்படுத்திய சினிமாவுக்கு மவுசு உண்டு. 1990 - 2000களில் இந்திய காவல்துறை சேவை (ஐ.பி.எஸ்) அதிகாரிகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் ஏராளமாக வந்தன. 90களில், மிசோரத்தில் பிறந்த கர்நாடக கேடர் அதிகாரியாக இருந்த அரசியல்வாதியான எச்.டி.சங்லியானாவின் வாழ்க்கையைப் பற்றி திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இவர் வீரப்பன் என்கவுண்டரில் முக்கியப் பங்கு வகித்த அதிகாரி. இவரைப் போலவே கெம்பையா ஐ.பி.எஸ், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பி.பி. அசோக் குமார் ஆகியோரின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்தன.

இந்த ட்ரெண்ட் இப்போதும் தொடர்கிறது. இந்த முறை கன்னட திரையுலகினர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த முறை ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பக்கம் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது. அந்த ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் ரோஹிணி சிந்தூரி. மைசூரு துணை ஆணையராக இருந்த இந்த சிந்தூரி பல்வேறு காரணங்களுக்காக கன்னட சினிமா உலகை தாண்டி, அம்மாநில மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.

இந்த மாத தொடக்கத்தில், மைசூருவில் அவருக்கும் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா இரு அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகத்திற்கு வெளியே இடமாற்றினார். சிந்தூரி இப்போது இந்து மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்தை சிந்தூரி எதிர்த்துள்ளார்.

தனது இடமாற்றத்தில் ஓர் அரசியல் நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மட்டுமல்ல, மைசூரு நகரவாசிகளும் அவரின் மாற்றத்தை எதிர்த்துள்ளனர். ஏனென்றால், சமீபத்தில் சிந்தூரி 40 ஏக்கருக்கு அதிகமான ஒரு நில மோசடியை அம்பலப்படுத்த முயன்றார். ஜனதா தள எம்.எல்.ஏ.வின் தவறான பதிவுகளைப் பயன்படுத்தி இந்த நிலம் பதிவு செய்யப்பட்டதாகவும், குடிமை அமைப்பின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த நிலத்தில் உள்ள கட்டிடத் திட்டம் வேறுபட்டதாகவும், இதனால் நிலம் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று வெளிப்படையாக கூறினார்.

இதற்காக அவர் அச்சுறுத்தலை சந்தித்தாக கூறப்படுகிறது. மேலும், இந்த விஷயத்தை மையப்படுத்தி தொகுதி எம்எல்ஏ மற்றும் எம்பி ஆகியோர் சிந்தூரி மற்றொரு பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே சண்டை மூட்டிவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இந்த சண்டைக்கு பின்பே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிந்தூரி எடியூரப்பாவைச் சந்தித்து தனது முடிவை மறுபரிசீலனை செய்யச் சொன்ன நிலையில், அவர் வேண்டுகோளை நிராகரித்தார்.

இந்த விவகாரம் மட்டுமல்ல, பல விவகாரங்களில் நேர்மையாக செயல்பட கூட அதிகாரியாக கர்நாடக மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர். இப்படி சிந்தூரியின் வாழ்க்கை பல ஏற்ற - இறக்கங்களைக் கண்டது, ஒவ்வொரு முறையும் அவர் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தபோது, அவருக்கு கிடைத்த பரிசு பணிமாற்றம். ரோகிணி 2009-ல் யுபிஎஸ்சி தேர்வில் 43 வது இடத்தைப் பிடித்தவர். 2011 முதல் கர்நாடகா கேடரில் சேவை செய்து வரும் சிந்தூரி, ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மாண்டியா ஜில்லா பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது அம்மாவட்ட மக்களுக்கு 1.02 லட்சம் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்து அந்தப் பகுதியையே மாற்றினார்.

அதேபோல், காவிரியின் மையப்பகுதி மற்றும் மாண்டியாவின் கரும்பு பெல்ட் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த விவசாய முறைகளையும் அவர் தொடங்கினார். அவரது பணிக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. மேலும், ஹசன் மாவட்டத்தில் பணிபுரியும்போது சக்லேஷ்பூரில் உள்ள மணல் மாஃபியா மீது நடவடிக்கை எடுத்ததற்காக இடமாற்றத்தை சந்தித்தார். 2019-ல் பாஜக அரசின் கீழ், கர்நாடக கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் செயலாளராக மீண்டும் இடமாற்றத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. 2019 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் நல நிதியில் இருந்து வெள்ள நிவாரணத்திற்கு பணத்தை மாற்றுவதற்கான முயற்சிகளை அவர் எதிர்த்தார்.

இப்படி கடந்த தசாப்தத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக அவரது பயணம், மக்கள் அளித்து வரும் ஆதரவு ஆகியவை கன்னட திரையுலகினரின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. கன்னட இயக்குனர் கிருஷ்ணா ஸ்வர்ணசந்திரா சிந்தூரின் பயோபிக் படத்தை இயக்க, அக்‌ஷதா பாண்டவபுரா ஐஏஎஸ் அதிகாரி சிந்தூரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com