“நிரூபிக்க முடியாவிட்டால் பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன்”- கங்கனா ரனாவத்

“நிரூபிக்க முடியாவிட்டால் பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன்”- கங்கனா ரனாவத்
“நிரூபிக்க முடியாவிட்டால் பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன்”- கங்கனா ரனாவத்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தான் வெளியிட்ட கருத்துகளை நிரூபிக்க முடியாவிட்டால் தனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

ரிபப்ளிக் தொலைகாட்சியில் பேசிய கங்கனா, ‘’நான் பேசிய வீடியோவை கேட்டபோது, அதுகுறித்து விசாரிக்க மும்பை போலீசார் என்னை அழைத்தனர். நான் மணாலியில் இருந்ததால் எனது அறிக்கையை பெற யாரையாவது அனுப்புங்கள் எனக் கூறினேன். ஆனால் அதன்பிறகு என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. என்னால் நிரூபிக்க முடியாத ஒன்று குறித்து நான் பொதுவாகவே அறிக்கை வெளியிட மாட்டேன். அப்படி என்னால் நிரூபிக்க முடியாவிட்டால் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன். நான் அதற்கு தகுதியற்றவளாகக் கருதிக் கொள்வேன். ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் எதையும் வெளிடக்கூடிய ஆள் நான் அல்ல’’ என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஜூன் 14 அன்று நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார். 34 வயதான அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. இதனிடையே நடிகை கங்கனா, பாலிவுட் மற்றும் ஊடகங்களில் அவர் குறித்து வெளியான தவறான செய்திகள் மற்றும் நிராகரிப்புகள்தான் அவர் இந்த முடிவு எடுத்ததற்கு காரணம். இது தற்கொலை அல்ல. பாலிவுட்டால் ’திட்டமிடப்பட்ட கொலை’ என்று பேசியிருந்தார்.

சுஷாந்த் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்திகளை மேற்கோள்காட்டி வாசித்துக் காண்பித்தார். மேலும் மீடியா தன்னை குறிவைத்தபோதும் தான் எதுவும் கூறவில்லை எனவும், ராணி லக்‌ஷ்மி பாய் படத்திற்குப் பிறகு சுதந்திரப் போராளிக்கு எதிரானவர் என ஒரு பத்திரிகையாளர் தன்னை கூறியபோதுதான் தான் பேசியதாகவும் கூறியிருந்தார்.


மேலும் ‘’ சுஷாந்தின் மறைவு எங்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. அவர் மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வால் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் பொறியியல் துறையில் டாப் ரேங்க்கில் வந்த ஒருவருடைய மனம் எவ்வாறு பலவீனமாக இருக்கும். பாலிவுட் சினிமா அவரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை எப்போதும் ஒதுக்கப்பட்டதாகவே உணர வைத்திருக்கிறது. சுஷாந்த் செய்த ஒரே தவறு, அவர்கள் திட்டத்திற்கு அடிபணிந்ததுதான்’’ என்றும் கூறியிருக்கிறார்.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சுஷாந்தின் மரணத்தில் இதுவரை சந்தேகப்படும்படியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை எனவும், சிபிஐ விசாரணைத் தேவையில்லை எனவும் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com