‘ஒருவரது மரணத்தை தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தமாட்டேன்’ கங்கனாவுக்கு டாப்ஸி பதிலடி!
பாலிவுட் நடிகைகள் கங்கனா ரனாவத்துக்கும் டாப்ஸிக்கும் மோதல் வெடித்திருக்கிறது. அண்மையில் அர்னாப்கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நேர்காணலில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக கங்கனா பேசியபோது, நடிகை டாப்ஸியை ‘பி’ க்ளாஸ் நடிகை என்றும் ’வெளிநாட்டவர். சினிமா வாய்ப்புகள் கிடைக்காதவர்’ என்றும் விமர்சித்தார். மேலும், ’டாப்ஸியின் படங்கள் மாஃபியாக்களால் தயாரிக்கப்படுகிறது. அவர்களைத்தான் டாப்ஸி நேசிக்கிறார்’ என்று மறைமுகமாக கரண்ஜோகரையும் சாடியிருந்தார்.
கங்கனா பேசியதைப் பார்த்து அதிர்ந்துபோன டாப்ஸி பதிலடியாக, “எனது கடந்தகால மற்றும் எதிர்கால படங்கள் மாஃபியாக்களால் தயாரிக்கப்படவில்லை. நான் ஒருவரது மரணத்தை தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தமாட்டேன். எனக்கு உண்ண ரொட்டியும் அங்கீகாரத்தையும் கொடுத்த சினிமாத்துறையை கேலி செய்யமாட்டேன். கங்கனா ரனாவத்தும் அவரது சகோதரியும் எனது கடின உழைப்பை இழிவுப்படுத்த நினைக்கிறார்கள்” எறு தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்தவர், மேலும்,
”என்னை வெளிநாட்டவர் என்பதில் குறைவுபடுத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்து வருகிறேன். இப்போது எனது கைகளில் ஐந்து படங்கள் உள்ளன. எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று யார் சொன்னது? எனது திரைப்படங்களை தேர்வு செய்வதை சீராக செய்கிறேன். கரண்ஜோகரை விரும்புகிறேன் என்று குறிப்பிடவில்லை. அதே சமயம் வெறுக்கிறேன் என்றும் சொல்லவில்லை” என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த இரண்டு நடிகைகளுமே தமிழ் படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

