''மும்பைக்கு வருகிறேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள்'' சிவசேனாவுக்கு கங்கனா ரனாவத் சவால்
மும்பைக்கு வரும் 9 ஆம் தேதி வரப்போவதாகவும் துணிச்சல் இருந்தால் தடுத்து பாருங்கள் என்றும் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளார்.
மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாக அண்மையில் நடிகை கங்கனா ரானவத் ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பை மாநகரத்திற்கு வரவேண்டாம் என்றும், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு, சஞ்சய் ராவத்துக்கு பதில் அளித்திருக்கும் கங்கனா ரனாவத், சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், வரும் 9 ஆம் தேதி மும்பைக்கு நிச்சயம் வரப் போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார். தற்போது கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.