'மன்மத லீலை' மாற்றம் முதல் 'பூட்ட கேஸ்' தைரியம் வரை... கமல்ஹாசனின் சினிமா பேசிய அரசியல்!
தமிழ் சினிமாவில் அரசியல் பார்வையைத் தீவிரமாக முன்னெடுப்பது குறைவு. அதைத் தொடர்ச்சியாக ஒரு திரைக் கலைஞர் தனது படங்கள் மூலம் செய்வதென்பது இங்கே அரிதிலும் அரிது. ஆனால், அதை கமல்ஹாசன் செய்திருக்கிறார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சூழலில், அவரது திரைப்படங்கள் பேசிய அரசியலை கொஞ்சம் அலசுவோம், அவரது பிறந்தநாளையொட்டி.
தன் ஆரம்பகால படம் ஒன்றில் ஒல்லியாக, சற்றே உயரமாக இருப்பார் கமல். 20 வயது இளைஞனுக்கே உரிய ஒரு துருதுருப்பு அவரின் கண்களில் இருக்கும். ஒரு கூட்டத்தின் இறுதியில் 'ஜனகனமன' ஒலிக்க, தேசத்தின் மீது பேரன்பு கொண்ட அந்தக் கதாபாத்திரம் இந்தியாவுக்கு மரியாதை செலுத்திக்கொண்டிருக்கும் தருணத்தில், அருகிலிருக்கும் ஒருவர் பபுள் கம் மென்றுகொண்டிருப்பதை கவனிக்கிறார். கண்கள் முழுவதும் கோபம். ஆனாலும் பாடல் முடியும் வரை காத்திருந்து, தேசிய கீதம் முடிந்த அடுத்த நொடி, "இவ்ளோ நேரம் பாடுனது ஜாலிலோ ஜிம்கானா இல்லடா.. ஜனகனமன.." என்று கூறியவாறே அந்த நபரை அடிக்கிறார்.
இப்படியான காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது, அவை அந்த நாயகனை அல்லது அந்தக் கதாபாத்திரத்தை பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளிக்கிறது. இவர் தேசப்பற்று மிக்கவர் என்பது மாதிரியான சிந்தனையை மக்கள் மனதில் எளிதில் பதிக்கின்றது. இதே நடிகர் இன்னும் நான்கைந்து படங்களில் இப்படியான கதாபாத்திரங்களில் நடித்தால் "இந்தியாவை காக்க வந்த ஏணிகளில் ஒருவர்" என்கிற பட்டமேகூட கூடிய சீக்கிரம் கிடைத்துவிடும். திரைப்படங்கள் செய்யும் மாயாஜாலங்களில் முக்கியமான ஒன்று இது. எம்ஜிஆர் என்கிற பிம்பம் கட்டமைக்கப்பட்டதின் பின்னணியில் இருக்கும் மிகப்பெரும் அரசியலும்கூட இதுதான்.
ஆக, திரைப்படங்களில் நடித்து புகழ்பெறும் ஒருவர் மீது அவர் அறிந்தோ, அறியாமலோ இப்படியான சில பார்வைகள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. பலசமயங்களில் நிஜத்திற்கும், அவரது திரைப்பட பாத்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருந்தாலும்கூட இந்த மாதிரியான கட்டமைப்புகள் தடுக்க இயலாதவை. இந்த இடத்தில்தான் கமல்ஹாசன் என்னும் மகத்தான திறமைசாலி வேறுபடுகிறார். தான் முன்னெடுக்கப்போகும் அரசியலை தானே திரைப்படங்களில் வடிவமைத்தவர் இவர். தொடர்ச்சியான இலக்கிய பரிச்சயமும், உலக சினிமாக்களின் மீதிருந்த அவருடைய கவனமும், இறுக்கம் நிறைந்த தமிழ்ச் சமூக சூழலில் "அப்படிப்பட்ட எவ்வித இறுக்கமும் இல்லாமல் வெளிப்படையாக நாம் திரைப்படங்கள் மூலம் அரசியல் பேசமுடியும்" என்பதை பல்வேறு சமயங்களில் அவர் நிரூபித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.
திரையில் அரசியல் முன்னெடுப்புகள்!
'மன்மத லீலை' போன்ற படங்களில் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நாயகர் ஒருவர் தனக்கு செக்ஸ் சம்பந்தமான நோய் ஒன்று இருப்பதாக வெளிப்படையாக கூறுவதை போன்று இருக்கும் காட்சி அமைப்பே ஒரு பெரிய அரசியல் முன்னெடுப்புதான். ஏனெனில், இங்கே தமிழில் நாயகன் என்பவன் அப்பழுக்கற்றவன். அவன் மற்றவர்களை திருத்தி நல்வழிப்பப்படுத்தவேண்டும். அவனே பிரச்னையாக இருக்கக்கூடாது.
கே.பாலசந்தர் என்கிற பல்கலைக்கழகத்தில் முதன்மை மாணவராக இருந்த கமல்ஹாசன் என்னும் நடிகர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சப்பாணியாக கோவணம் கட்டி வந்த பொழுதுகளில் அவர் எந்தமாதிரியான சினிமாவை இங்கே தான் முன்னெடுத்து சொல்லப்போகிறேன் என்பதற்கான அஸ்திவாரத்தை இன்னும் பலமாக்கினார். 'சிவப்பு ரோஜாக்கள்' வந்தபோதோ, அந்த அஸ்திவாரம் இனி யாராலும் தகர்க்கவே இயலாது என்பதை உறுதிசெய்தார்.
இப்படியாக, தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களில் தனக்கான அரசியல் எதுவாக இருக்கிறது என்பதை சிறிது சிறிதாக வடிவமைத்து, அதை மக்கள் மனத்திலும் பதியவைத்த கமல்ஹாசன், அவரின் மீது இருக்கும் இந்த பிம்பத்தை இன்னும் பெரியதாக உயர்த்தும்படியான படங்களை தொடர்ந்து தேர்வு செய்ததை அவரின் திரைப்படப் பட்டியலை பார்த்தாலே நாம் உணர்ந்துகொள்ள முடியும். இது அவர் அறிந்தே செய்ததாகவும் கொள்ளலாம்.
'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் சுப்ரமணிய பாரதியாரின் வழிநடக்கும் ஒரு மனிதனாக வருவார். உண்மையில் இதைவிட வலிமையாக ஓர் அரசியலை திரைப்படத்தில் பதிவு செய்தல் இயலாது. அதிலும் குறிப்பாக படத்தில் அவர் தன் தந்தைக்கு எதிராக வாதம்புரிய உபயோகிக்கும் எல்லா பாரதியார் பாடலுமே உணர்ச்சிப்பிழம்பானவை.
'சத்யா'வின் உக்கிரம்!
காதல் கதைகள், பழிவாங்கும் கதைகள், த்ரில்லர் படங்கள் என கமல் வரிசையாக தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. மசாலா படங்கள் எனக்கூறப்படும் வணிக நோக்குள்ள படங்கள் அவரும் பல செய்தார். 'சகலகலா வல்லவன்' மாதிரியான படமும் அதில் அடக்கம். ஆனாலும் கமல் நேரடியாக ஒரு பெரும் அரசியலை பேச எடுத்துக்கொண்ட முதல் படமாக 'சத்யா'வை சொல்லலாம். சன்னி தியோல் 'அர்ஜுன்' என்கிற பெயரில் இந்தியில் எடுத்த படத்தின் மறு உருவாக்கமே 'சத்யா'. ஆனால், இந்தி அர்ஜூனுக்கும், தமிழ் சத்யாவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்தி 'அர்ஜுன்' வெறும் ஆக்ஷன் படம் என்கிற அளவில்தான் இருக்கும். அதுவே, தமிழில் 'சத்யா' முன்வைக்கும் அரசியல் மிகவும் காட்டமானது. எக்காலகட்டத்திற்கும் பொருந்தக்கூடியது.
வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம் என்று இந்தியாவில் தனியாக எதுவுமே இல்லை. எப்போதுமே அது நிகழ்ந்துகொண்டிருப்பதுதான். இளைஞர்களை வழிநடத்துதல் என்பது ஒரு கேரம் விளையாட்டினை போல. எந்தப் பக்கம் அடித்தால் அவர்கள் குழிக்குள் விழுவார்கள் என்பதை கணித்து இங்கே அரசியல் நடத்துபவர்கள் பலர். "என்னை சுத்தி நடக்குற அசிங்கம், அவமானம், ஏற்றத் தாழ்வு இதெல்லாம் பார்த்துட்டு என்னால இருக்கமுடியாது.. I am going to fight them and I want you to fight them" என்று ஓர் இளைஞன் முடிவெடுக்கிறான் என்றால், அவன் அந்த கேரம் விளையாட்டில் எத்தனை அடிகளை பெற்று, எத்தனை முறை குழிக்குள் விழுந்திருப்பான் என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். அப்படித்தான் சத்யமூர்த்தி என்கிற சத்யாவும் முடிவெடுக்கிறான். ஆனாலும் கூட பாருங்கள் ஸ்ட்ரைக்கர் வேறொரு வலிமையானவனின் கைகளில்தான் இருந்துகொண்டிருக்கிறது. அவனது விரலசைவுதான் மீண்டும் அந்த இளைஞன் எந்தக் குழியில் விழுவது என்பதை தீர்மானிக்கவும் செய்கிறது.
இந்தத் தீவிர அரசியலை பேசிய படமாகத்தான் 'சத்யா'வை பார்க்கிறேன். கமலின் சொந்தப்படம் இது. 'கோபம் மிகப்பெரிய ஆயுதம்; அதை பலூன் உடைக்க பயன்படுத்தாதீர்கள்' என்பது பொன்மொழி. நாம் எந்த திசையை நோக்கி நம் கோபத்தை செலுத்தவேண்டும் என்கிற புரிதலை ஒருவன் அடைய அவன் இழப்பது நிறைய. இதை கமலின் திரைப்பட நோக்கிற்கும் பொருத்தலாம்.
இனி, தான் எவ்விதமான திரைப்படம் இங்கே செய்யவேண்டும் என்பதை கமல் உறுதியாக முடிவெடுத்த படமாக 'சத்யா'வைக் குறிப்பிடலாம். "ஊர்ல இருக்குறது என்ன ஒரே ஒரு சத்யாவா? நாடு முழுக்க சத்யாதான்.." என்கிற வில்லனின் வசனம் மிகவும் முக்கியமானது. இதைத் தெளிவாக திரையில் கூறிய திருப்தி கமலுக்கு கண்டிப்பாக கிடைத்திருக்கும். ஆனால், இதில் பிரச்னை என்னவென்றால், இன்னும் கூட நாடெங்கும் சத்யாக்கள் நாசமாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். "ஓடு... ஓடிப்போயி கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சிக்க... இல்லைன்னா, நெஜம் வந்து கடிச்சி வச்சிரும்.." என்று சகமனிதனை நோக்கி சத்யா கூறும் வார்த்தைகள் சத்யமானவை.
'தேவர் மகன்'... கெட்டுப்போன பால்?!
கே.பாலசந்தர் 'தண்ணீர் தண்ணீர்' போன்ற படங்களில் ஏற்கெனவே கிராமங்களின் வலிகளைப் பற்றி பேசியுள்ளார். அவரே பின்னர் 'உன்னால் முடியும் தம்பி' எடுத்தார். மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்க முயலும் உதயமூர்த்தி என்கிற இளைஞனின் கதை. சாஸ்திரிய சங்கீதத்தை உயிர்மூச்சாகக் கொண்டு வாழும் ஒருவரின் மகன், உழைப்பாளிகளின் துயர் துடைப்பதே உலகை உயர்த்தும் என்கிற கருத்தைக் கொண்டு, அதன்வழி நடக்கிறான் என்பதை பேசும் படம் இது. 'மது அருந்தாமை', 'மரங்களை வளர்த்தல்', 'சகமனிதனுக்கு உதவாமல் பரம்பரை கெளரவங்களைத் தூக்கி சுமத்தல் பாவம்' என்பன போன்ற பல விஷயங்களை பேசிய படம் இது. ஆனால், இந்தப்படம் ஓடவில்லை.
மாறாக, 'தேவர் மகன்' பட்டிதொட்டியெல்லாம் ஓடியது. தென்தமிழகம் எப்போதுமே சாதியை மையமாக வைத்த அரசியலையே முன்னெடுத்திருக்கிறது. 'தேவர் மகன்' படம் ஒரே சாதிக்குள் பங்காளிகளாக இருக்கும் இருவரின் பகையை பேசுவதாகக் கொண்டாலும்கூட, பார்வையாளர்களான ரசிகர்கள் குறிப்பாக தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்தப் படத்தை அவர்கள் சாதிப்பெருமை பேசும் படமாகவே இன்றுவரை நினைக்கிறார்கள். 'போற்றிப்பாடடி பொன்னே... தேவர் காலடி மண்ணே...' பாடல் இன்றும் அவர்களுக்கு தேசிய கீதம். "போயி புள்ளகுட்டிங்களை படிக்க வைங்கடா.." என்பதே கமல் சொல்லவந்த நீதி என்றாலுமேகூட, "நான் கொடுத்த பாலெல்லாம் இப்படி ரத்தமா ஓடுதே..." என்கிற வன்முறைக்கு எதிரான ஒரு தாயின் கூக்குரலை பதிவு செய்த படமாக இது இருந்தபோதிலும்கூட, படத்தின் மையக்கருத்து இப்படி திரிந்து கெட்டுப்போன பாலாக வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை.
கமல் இதை பொதுவான ஒரு படமாக எடுத்திருக்கலாம். 'தேவர் மகன்' என்கிற தலைப்பே அதை செய்யவில்லை. அதிலிருந்தே தொடங்கிவிடுகிறது பிரச்னைகள். தேவர்மகனின் இந்தக் கடும் பாதிப்பே பின்னாளில் அவர் 'விருமாண்டி' எடுக்கையில் இன்னும் கடுமையாக எதிரொலித்தது. "கமல் தனது படங்கள் சரியாக போகாத காலகட்டங்களில் எல்லாம் சாதியைக் கையிலெடுத்து தனது படங்களை ஓடவைக்க நினைக்கிறார்" போன்ற விமர்சனங்கள் மிகப் பரவலாக எழுந்தது.
ஆனால், உண்மையில் 'விருமாண்டி' பேசியது, தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு பார்வையை. ஆனால், 'தேவர் மகன்' மற்றும் 'விருமாண்டி' இரண்டுமே வன்முறையை அதிகளவில் கையாண்ட படங்களும்கூட. ஹீரோயிசம் எனப்படும் நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் ஒரு படமாகவும்கூட அவை திகழ்வதால், உண்மையில் அந்தப் படங்கள் பேசவந்த அரசியல் மங்கிப்போய், அந்தக் கதையை பேச, அவர் எடுத்துக்கொள்ளும் களங்கள் மிக முக்கிய பேசுபொருளாகி நிற்கின்றன. திரைப்படங்களில் பழம் தின்று கொட்டை போட்ட கமல் போன்றவர்கள் இந்த மாதிரியான நிகழ்வுகளை முன்பே ஏன் கணிக்கவில்லை என்கிற பெரும் கேள்வி எப்போதுமே உண்டு. இன்றும் அது கேள்வியாக மட்டுமே தொக்கி நிற்கிறது.
அன்பே சிவமும் கம்யூனிஸமும்
'அன்பே சிவம்' படத்தில் கமல் பேசியது இன்னொரு முக்கியமான அரசியல். உலகளவில் கம்யூனிஸம் மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கும் ஒரு தத்துவமாகவும் அரசியலாகவும் இருந்துவந்துள்ளது. ஆனால், இந்தியாவில் அதைப் பற்றிய புரிதல்கூட இன்றைய தலைமுறைக்கு கிடையாது. அது ஒரு தோற்றுப்போன சித்தாந்தம் என்பதுதான் இங்கே பரவலாக கூறப்படும் ஒரு கருத்து. ஒன்றைப் பரீட்சித்துப் பார்க்காமலேயே தோற்றுப்போன ஒன்று என்று கூறுவது வேடிக்கையானது. அருகிலிருக்கும் கேரளாவில் இருக்கும் மக்கள் முன்னெடுக்கும் வீதி அரசியலை சற்றே உற்று நோக்குங்கள். அரசியல் இல்லாத இடமே இங்கு கிடையாது. எங்கெல்லாம் அரசியல் இருக்கிறதோ அங்கெல்லாம் போராட்டமும் அவசியமாகிறது. எங்கே போராட்டம் தனிமனிதனின் உரிமை என்பது உணர்ந்து செயல்படுத்தப்படுகிறதோ அங்கேதான் மக்கள் சக்தி என்பதற்கான உண்மையான அர்த்தம் தெரியவரும்.
அந்த வகையில் கமல் 'அன்பே சிவம்' பேசிய கம்யூனிஸம் முக்கியமானது. சற்றே சினிமாத்தனமான கம்யூனிஸம்தான் என்றபோதிலும்கூட மாதவனுக்கு கமலுக்குமான வாக்குவாதங்களில் கமல் சொல்லும் பல வசனங்கள் முக்கியமானவை. உருவத்தையும் உடையையும் வைத்தே மதிப்பிடப்படும் ஒரு சமூகத்தில் இருக்கிறோம். அதை போறபோக்கில் சாடியிருப்பார் கமல்.
'யார் கடவுள்' அல்லது 'எது கடவுள்' என்கிற சிந்தனையை எதிர்கொள்ளாத மனிதனே இல்லை இங்கே. ஏனெனில், கடவுள் என்கிற உருவகம் எல்லா நம்பிக்கைகளிலும் பெரிய நம்பிக்கையாக உருவெடுத்து நிற்கிறது. ஆனால், சகமனிதன் மீது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவன் வைக்கும் அன்பும், அதற்காக அவன் பிரயத்தனப்படுவதுமே கடவுள் என்று கூறி "நீ அப்படி இருப்பதனால் நீயும் கடவுள்தான்" என்று மாதவனிடம் கூறும் இடம் மிக மிக முக்கியமானது. அதை ஒரு கம்யூனிஸ்ட் என்கிற இடத்தில் இருந்து சொல்கையில், அது இன்னும் வலிமை பெறுகிறது. 'ஓடி ஓடி ஒளிந்தாலும் வாழ்க்கை விடுவதில்லை' என்கிற வரிகளும், 'மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா' என்கிற வரிகளும் காலகாலத்திற்கும் பேசப்படவேண்டிய ஓர் அரசியல் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
குருதிப்புனலும் விஸ்வரூபமும்!
'யார் உண்மையில் தீவிரவாதிகள்?' என்கிற கேள்வி இங்கே கேட்கவேண்டிய அவசியம் ஒன்று இருக்கிறது. கமலுக்கும் அந்தக் குழப்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், கமல் படங்கள் அப்படியான கேள்வியையும் குழப்பங்களையும் கொடுக்கத் தவறியதே இல்லை. மிகக் குறிப்பாக, 'குருதிப்புனல்' மற்றும் 'விஸ்வரூபம்' ஆகிய இரண்டு படங்களை எடுத்துக்கொள்வோம். இந்தியில் 'துரோக்கால்' பேசிய நக்சலைட்களுக்கும், தமிழில் 'குருதிப்புனல்' பேசிய நக்ஸலைட்டுகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஆயுதம் ஏந்தி போராடுவது தவிர தீவிரவாதிகளுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் வேறு எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால், தமிழில் நக்ஸலைட்டுகளை உருவகப்படுத்திய விதம் இங்கே உண்மையில் பெரும் கேள்விக்குறியாக்கப்பட வேண்டிய விஷயம்.
விஸ்வருபத்தில் கமல் காட்டிய ஆப்கான் தீவிரவாதம் தெளிவான பார்வை கொண்டது. அதில், எவ்வித சந்தேகமும் கிடையாது. 'அல்லா ஹூ அக்பர்' என்று பின்னணியில் ஒலிக்க ஒருவனை சாலை மத்தியில் வைத்து தூக்கிலிடும் காட்சி உண்மைக்கு மிக நெருக்கமானது. இந்த சர்வதேச அரசியலில் அமெரிக்கா நியாயவான்கள் என்பதுபோன்ற ஒரு தொனி இருந்ததையும் நாம் கவனிக்கவேண்டும்.
முஸ்லிம் தீவிரவாதம் கமல் பேசப்போகிறார் என்றதுமே இங்கே வெடித்த பல பிரச்னைகள் நாம் அறிந்ததே. ஆனால் அதே 'விஸ்வரூபம்' படத்தில் ஊஞ்சலில் ஆடும் ஒரு சிறுவன் மூலமாக உலகமெங்கிலும் இருக்கும் எல்லா தீவிரவாத அமைப்புகளுக்கு பின்னால் அழிந்து போகும் பல கனவுகளை காட்சிப்படுத்தி இருப்பார். இந்த காட்சியமைப்பு குருதிப்புனலில் இல்லாமல் போனதும், தொடர்ந்து பத்ரி போன்ற நக்ஸலைட்டுகளை தனது பேச்சுவன்மத்தால் மடக்க நினைக்கும் ஆதிநாராயணனாக மட்டுமே கமல் இருந்தார். உண்மையில், நக்சலைட்டுகள் முன்னெடுக்கும் அரசியல் அந்த மண் சார்ந்தது. வெட்டியெடுக்கப்படும் தனிமங்களுக்கு பின்னால் தனது மண்ணிலிருந்து வேரோடு வெட்டி எறியப்படும் மக்களும் உண்டு என்பதை உணர்ந்து ஆயுதம் தரித்தவர்களுக்கும், இறைவன் வழியில் இதையெல்லாம் செய்கிறேன் என்கிற பெயரில் மனித வெடிகுண்டாக மாறும் தீவிரவாதிகளுக்குமான வித்தியாசத்தை கமல் உணர்ந்திருந்தாரா என்கிற சந்தேகம் எழுகிறது.
கடவுள் மறுப்பு பேசும் கமல்ஹாசன் என்கிற அரசியலும்கூட இங்கே முக்கியமான ஒன்று. "கடவுள் இல்லைன்னு சொல்லல... இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்" என்கிற குழப்பம்தான் கமலின் நாத்திக அரசியலோ என்கிற கேள்வி இங்கே எழும்பாமல் இல்லை. அதே கமல், தான் சார்ந்த வைணவ சமூகத்தை தனது படங்களில் கேலி பேசும் சாக்கில் தொடர்ந்து காட்சிப்படுத்துகிறாரோ என்கிற கேள்வியும்கூட இங்கே உண்டு. எல்லாவற்றிற்கும் உச்சமாக 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படத்தில் இறுதியில் பேசும் வசனங்கள் முஸ்லிம் தீவிரவாதம் என்பதையும் தாண்டி, கமல் முன்னெடுக்கும் இந்தத் தீவிரவாத அரசியலின் பின்னால் இருக்கும் அஜெண்டா அவர் சார்ந்த மதத்திற்கு மெல்லிய சாமரம் வீசுவதை போன்று இருப்பதையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
'எ வெட்னஸ்டே' படத்தில் இல்லாத பல வசனங்கள் தமிழில் இருந்ததை இங்கே நாம் யோசிக்கவேண்டும். அழுத்தம் திருத்தமாக ஒரு விஷயத்தை சொல்கிறேன் என்று நினைத்து ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது அசூயை கொள்ளச்செய்யும் வகையிலான வசனங்கள் வலிந்து திணிக்கப்பட்டதோ என்கிற சந்தேகமும்கூட எழாமல் இல்லை. அந்த வகையில் விஸ்வரூபத்தில் பேசியதைவிட மிக அதிகமாக 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கமல் பேசியிருப்பார்.
ஹேராம்... சில புரிதல்கள்!
இவ்வளவும் நாம் பேசும் கமல்தான் 'ஹேராம்' எடுத்தார். இந்திய அளவில் இப்படியான ஒரு சிந்தனையும், அந்தச் சிந்தனையை வெள்ளித்திரையில் அப்படியே மடைமாற்றம் செய்யும் சக்தியும் உள்ள ஒருவர் கமல் மட்டும்தான். காந்திய சிந்தனைகள் எக்காலத்திற்கும், எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை. அகிம்சையை போதித்தவர் காந்தி என்கிற அளவு மட்டுமே அவர் அறியப்படுவதும்கூட வேதனைதான். அந்த போதனைகளுக்குப் பின்னால் காந்தி எதிர்கொண்ட பிரச்னைகள் ஏராளம். சாகேத் ராம் என்கிற ஒருவன் தன் குடும்பத்தை இல்லாமல் ஆக்கிய ஒரு மனிதனை கொல்ல துடிக்கும் கதையல்ல 'ஹேராம்'. வரலாறு முழுக்க ஆயிரமாயிரம் போர்கள், கலவரங்கள், கடவுளின் பெயரால் நடந்த அக்கிரமங்கள் எல்லாவற்றிற்கும் இறுதியில் அன்பு என்பதே முடிவாக இருந்திருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்ன படம் அது. படம் பல மொழிகளை பேசியதால் பலருக்கும் புரியாமல் போனது தனிக்கதை. உண்மையில் தமிழில் மட்டுமே பேசுவதைப்போல எடுத்திருந்தாலும்கூட இங்கே பலருக்கு புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் படத்தில் இருந்த அரசியல் அப்படி.
கமலின் புரிதல் வேறு. கமலை ரசிப்பவர்கள் கமலை புரிந்துவைத்திருப்பது வேறு என்கிற அளவில்தான் இங்கே நாம் பார்க்கமுடியும். ஏனெனில் ஒரு பெரிய வன்முறைக்காட்சிக்குப் பின்னால் வரும் ஒரே ஒரு வசனம், அந்த வன்முறையின் மொத்த அழுத்தத்தையும் நம்மீது புகுத்தி, அந்த வன்முறை சொல்லாமல் விட்டுச்சென்ற அந்த உள்ளார்ந்த அர்த்தத்தை நமக்கு செவியில் அறைந்தது போல சொல்லிச்செல்ல வேண்டும். சினிமா அதைத்தான் செய்யவேண்டும். கமலின் படங்கள் அதைச் செய்திருக்கிறது. ஆனால், அதை சொல்லும் விதத்தில் கமல் சற்று தடுமாறி இருக்கிறாரோ என்கிற எண்ணம் எழாமல் இல்லை.
ஆனாலும்கூட கமல் அளவிற்கு தமிழ் சினிமாவில் இந்த விஷயங்களை தீவிரமாக முன்னெடுத்தவர் மிகக்குறைவே. அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக தனது படங்கள் மூலம் அதைச் செய்வதென்பது இங்கே அரிதிலும் அரிது. ஆனால், அதை கமல் செய்திருக்கிறார். 'சவ்ஜாலயமும் ஆலயமே' என்கிற வசனம் எல்லாம் அவரின்றி சாத்தியமில்லை. "கடவுள் இருக்காருன்னு சொல்றான் பாரு அவனை நம்பு... கடவுள் இல்லைன்னு சொல்றான்னு பாரு அவனையும் நம்பு. ஆனால், தான்தான் கடவுள்ன்னு சொல்றான் பாரு... அவனை மட்டும் நம்பிறாத... பூட்ட கேஸ் ஆயிருவ" என்பதெல்லாம் சொல்ல இங்கே பலருக்கு தைரியமே இல்லை. கமல் அதை சாதித்திருக்கிறார்.
- பால கணேசன்