குற்றப்பரம்பரை சட்டத்தின் கொடூரமான காலங்கள்..கமலின் ‘THUG LIFE’ அறிவிப்பும், வரலாற்றுப் பின்னணியும்

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் எத்தகைய கதைக்களத்தை பின்னணியாக கொண்டு வரப்போகின்றார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் கதையின் உருவாக்கத்தில் மணிரத்னத்தோடு சேர்ந்து கமலின் பங்களிப்பும் இருக்கவே செய்யும்.
thug life
thug lifept web

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள திரைப்படத்திற்கு “தக் லைஃப்” என்று பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் 234ஆவது திரைப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வீடியோ ஒன்றை நேற்று (நவ.6) படக்குழு வெளியிட்டது. வெளியீட்டுக்கு முன்பாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா ஆகியோர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனால், நேற்று முழுவதும் படத்தின் டைட்டில் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியது. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த ’நாயகன்’-க்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி அமைந்து இருப்பதால் அதுவே மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு வித்திட்டது.

மிரட்டிவிட்ட டைட்டில் வீடியோ!

நேற்று வெளியிடப்பட்ட டைட்டில் வீடியோ மிகவும் அற்புதமாக இருந்தது. கமல்ஹாசனின் தோற்றமும், அமைக்கப்பட்டிருந்த சண்டைக் காட்சி அமைப்பும், மிரட்டலான பின்னணி இசையும் சிறப்பாக இருந்தது. வீடியோவின் தொடக்கத்தில் கமல்ஹாசன் நின்றுகொண்டிருக்க அவரை நோக்கி சிலர் ஓடி வருகிறார்கள்.

அப்போது, ‘என் பேர் ரங்கராய சக்திவேல் நாயக்கன். நான் காயல்பட்டினக்காரன்’ என்று சொல்கிறார். அத்துடன் கமல் பேசும் சில வார்த்தைகள் மிகவும் கவனிக்கும்படியாக இருந்தது. அதாவது, “பிறக்கும் போதே என் தலையில எழுதி வச்சுட்டாங்க நான் ஒரு கிரிமினல், ருண்டா, யாக்கூசா-னு. யாக்கூசானா ஜப்பான் மொழியில கேங்ஸ்டர்னு சொல்லுவாங்க.. காலம் என்னை தேடிவருவது முதல் தடவை அல்ல.. கடைசியும் அல்ல” என்று மிகப்பெரிய பின்புலம்கொண்ட வார்த்தைகளை கமல் சொல்கிறார். அத்துடன், “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. ஞாபகம் வச்சுக்கோங்க” என்று சொல்லி முடிக்கிறார். கமல்ஹாசன், படத்தில் தூத்துக்குடி வட்டார வழக்கில் பேசுகிறார். காயல்பட்டினம் என்பது தமிழ்ச் சமூக வரலாற்றில் முக்கியமான துறைமுகமாக அமைந்த பகுதி.

தக் லைஃப் உண்மையான அர்த்தம்:

தக் லைஃப் என்ற வார்த்தை தற்போது வலைதளங்களில் இயல்பாக புழக்கத்தில் உள்ள ஒன்று. அதன் உண்மை அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. தற்போதைக்கு ஒரு வாதத்திற்கு சரியான எதிர்வாதத்தை வைப்பது, சாதுர்யமான நடவடிக்கை போன்றவற்றிற்கு தக் லைஃப் போட்டு கமெண்ட் செய்கிறார்கள். நிறைய வீடியோக்களில் கவுண்ட்டர் பாய்ன்ட்களுக்கு இந்த கமெண்ட் தற்போது செய்யப்படுகிறது.

உண்மையில் தக் என்றால் திருடன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என்று பொருள். பன்மையில் பார்க்கும்பொழுது கூட்டமாக சேர்ந்து குற்றப்பின்னணி செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று அர்த்தம். ஜப்பான் மொழியிலும் யாக்கூசா என்றால் கூட்டமாகச் சேர்ந்து கொள்ளை, வழிபறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என்றுதான் அர்த்தம்.

வரலாற்று பின்னணி:

இந்தப் படத்தை பொறுத்தவரைகூட வரலாற்று பின்னணி கொண்டதாக இருக்கும் என்றே தெரிகிறது. அநேகமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடக்கக்கூடிய கதைக்களமாக இருக்கலாம் என்பதுபோல் தோன்றுகிறது. தமிழில் ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் இதுகுறித்த விரிவான ஆய்வுரீதியான தகவல்களை ஏற்கெனவே கொடுத்து இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எப்படி இந்த குற்றப்பின்னணி கொண்டவர்கள் பிரிட்டிஷார் உள்ளிட்டோருக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதும் அவர்களை ஒடுக்குவதற்காக சட்டம் இயற்றிய பிரிட்டிஷ் அரசாங்கம் அதை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பல்வேறு சமுதாய மக்களை கொடூரமான இன்னலுக்கு ஆளாக்கியது என்பதையும் காட்டி இருப்பார் இயக்குநர் ஹெச்.வினோத்.

அதாவது, வியாபாரம் செய்வதற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை கைப்பற்றியது. பின்னர் முழு ஆட்சிப் பொறுப்பையும் 1857ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு எடுத்துக் கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் வியாபாரத்திற்கு இடையூறாக இந்தக் கொள்ளைக்கும்பல் இருந்து வந்தது. அதற்காக பல சட்டங்களை கொண்டுவந்த பிரிட்டிஷ் அரசு இறுதியாக 1924ஆம் ஆண்டு குற்றப்பரம்பரை சட்டம் என்பதை வரையறுத்து முடித்தது. இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய மக்கள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்தனர். தமிழகத்திலும் பல்வேறு சமுதாயத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளாகினர்.

இதில் இரண்டு விதமான கண்ணோட்டம் இருக்கிறது. ஒன்று வரலாற்றுப் பின்னணியில் எப்படி ஒரு பெரிய கூட்டம் திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது. இன்னொன்று, இவர்கள் எப்படி பிரிட்டிஷ் காலத்தில் அவர்களுக்கு எதிராக திரும்பினார்கள் என்பது. ஒவ்வொன்றையும் வரலாற்றுப் பின்னணியில் பகுத்துப் பார்த்தால் தான் நாம்மால் உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். அதில் ஹெச்.வினோத் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக சில தகவல்களை ’தீரன் அதிகாரன் ஒன்று’ படத்தில் சுட்டிக்காட்டி இருப்பார். அதாவது. அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பும் கிளம்பியது. அதாவது, முந்தைய மன்னராட்சி காலம் குறித்த சில புரிதல்கள் இங்கு முக்கியமானது.

மன்னராட்சி காலத்தில் நாடு பிடிப்பது, யாரேனும் நாடு பிடிக்கும் நோக்கில் வந்தால் அவர்களுடன் சண்டையிடுவது... இதெல்லாம் மிகவும் இயல்பாக நடைபெறக்கூடியதுதான். அதற்கு மிகவும் தேவையானது மிகப்பெரிய படை வலிமை. மக்கள் கூட்டம் இந்த படைகளில் பங்கெடுத்ததைத் தாண்டி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆட்சியிலும் இந்தப் படைக்காகவே நேர்த்தியாக பயிற்சி மேற்கொள்ளப்பட்டு திறன்மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். இவர்கள் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார்கள். அதேபோல், உலகின் பகுதிகளில் தனியார் படைகளும் இருந்து வந்தது. அவர்கள் ஒரு படையை நடத்தி வருவார்கள். யாரேனும் மன்னர்கள் அல்லது தனிநபர்கள் உதவி என்று கேட்டு வந்தால் அவர்களுக்காக சென்று சண்டையிடுவார்கள். சாமுராய் போன்றவர்கள் அப்படியானவர்கள் தான்.

இப்படியான மிகப்பெரிய ராணுவம் சார்ந்த கூட்டம் பின் நாட்களில் போர்கள் இல்லாதபோது, சண்டையிட தேவைகள் இல்லாதபோது நிர்கதியாக சமுதாயத்தில் விடப்பட்டது. மிகப்பெரிய அரசுகள் இருந்தபோது சமுதாயத்தில் உற்பத்தியும் பெரிய அளவில் இருந்தது. ஆனால், அரசுகள் எல்லாம் உடைந்து கிராமரீதியான சமுதாயங்கள் மட்டுமே இந்தியாவில் தேங்கி நின்றபோது சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையை எட்டியது. உற்பத்தியில் மிகப்பெரிய பற்றாக்குறையும் இருந்தது.

வாரிசுப் போட்டிகள்தான் இந்தியா எங்கும் நிரம்பி இருந்தது. வேலை ஏதும் இல்லாத மிகப்பெரிய கூட்டம் நாடு முழுவதும் இருந்து வந்தது. அவர்கள் செல்வம் இருப்பவர்களிடம் கொள்ளை அடிப்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். ராணுவ பின்புலத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருந்ததால் அது அவர்களுக்கு கை கொடுத்தது. இத்தகைய வரலாற்று பின்புலத்தோடு இதைப் பார்க்கவில்லை என்றால் இவர்கள் குறித்து மிகவும் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் வீரர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்கள். எல்லா காலத்திலும் உதிரிகளாக திருடர்கள் இருப்பார்கள்; அவர்களை இவர்களோடு அப்படியே ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளக் கூடாது.

இரண்டு விதமான உண்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொள்ளைச் சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் நடந்தது என்பது. இதற்கு உதாரணம் குற்றப்பரம்பரை போன்ற நாவல்களே இதற்கு சாட்சி. கன்னம் இட்டு கொள்ளை அடித்தல் என்பார்கள். புதுமைப்பித்தன் கதைகளில், ’சங்குத்தேவன்’ கதை மிகவும் முக்கியமான ஒன்று. அதில் வரும் பின்னணியை கவனித்தால் புரியும். அதேபோல், தமிழ் சினிமாவில் அன்று தொடங்கி, ’தென்மேற்கு பருவக்காற்று’ வரை உள்ள படங்களின் பின்னணியை கவனித்தால் புரியும். இது தனி விவாதம்.

மற்றொரு உண்மை பிரிட்டிஷ் காலத்தில் நடந்த கொடூரங்கள். குற்றப்பின்னணி உடையவர்களை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசு செய்த அட்டூழியங்கள். எப்பொழுதெல்லாம் ஒடுக்குமுறை உருவாகிறதோ, அப்பொழுதெல்லம் கிளர்த்தெழுதலும் உருவாகும். பிரிட்டிஷ் அரசை எதிர்த்தவர்களைக்கூட இந்த சட்டத்தின் மூலம் ஒடுக்கினார்கள். அதனால், பிரிட்டிஷ் எதிர்ப்பில் இந்த தக்ஸ் பின்னணி கொண்டவர்கள்கூட முக்கிய பங்கு உண்டு. அமிதாப் பச்சன், ஆமிர்கான் நடிப்பில் உருவான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் கதையும் இதன் பின்னணி கொண்டதே.

இந்த சமுதாயத்தில் பிறந்தாலே குற்றப்பின்னணி உடையவன் என்று முத்திரை குத்துவதுதான் மிகவும் கொடூரமானது. ‘பிறக்கும் போதே என் தலையில் இவன் கிரிமினல் என்று எழுதி வச்சிட்டாங்க’ என்ற வார்த்தைகள்தான் இங்கு கீ பாய்ண்ட். இருப்பினும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் எத்தகைய கதைக்களத்தை பின்னணியாக கொண்டு வரப்போகின்றார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் கதையின் உருவாக்கத்தில் மணிரத்னத்தோடு சேர்ந்து கமலின் பங்களிப்பும் இருக்கவே செய்யும். அதற்கு உதாரணமாக, இந்த டைட்டில் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. அத்துடன், வெளிப்படையாக சாதிய பெயர்களை பயன்படுத்துவது தேவைதானா என்ற விவாதமும் எழுந்து இருக்கிறது. இருப்பினும் கதைக்களம் என்ன என்பதை பார்க்கும்பொழுதுதான் அதனை புரிந்துகொள்ள முடியும்.

மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணியை கையாள மணிரத்னமும், கமல்ஹாசனும் கைகோர்த்து இருக்கிறார்கள் என்பது மட்டும் இங்கு புலப்படுகிறது. ’கேஜிஎஃப்’ போன்ற பிரம்மாண்ட காட்சி மற்றும் திரைமொழியில் இருக்கப்போகிறதா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. காத்திருப்போம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com