இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை லண்டனில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017ம் ஆண்டு கலாசார வரவேற்பு விழா பங்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த பிப்ரவரி 27ல் நடந்தது. இதில், இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நடிகர் கமல்ஹாசன், கிரிக்கெட் வீரர் கபில் தேவ், மாநிலங்களவை எம்பியும், நடிகருமான சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கமல்ஹாசன், இதற்காக தனது பெயரை முன்மொழிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். இந்த விழாவில் இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேத் மிடில்டன், இங்கிலாந்து, இந்தியா தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கமலின் கனவு படமாகக் கருதப்படும் மருதநாயகம் படப்பிடிப்பினை இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 1997ம் ஆண்டு தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.