‘கோமாளி’பட ட்ரெய்லரில் ரஜினி அரசியல் குறித்து சர்ச்சை - கமல் வருத்தம்
‘கோமாளி’ ட்ரெய்லரில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விமர்சனத்தை பார்த்த கமல் வருத்தப்பட்டுள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியோ, நடந்து முடிந்த 22 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கண்டது. அரசியலில் இவர்கள் இருவரும் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் தற்போது ‘கோமாளி’ ட்ரெய்லரில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விமர்சனத்தை பார்த்த கமல் வருத்தப்பட்டுள்ளார்.
ஜெயம் ரவி நடிப்பில் ‘கோமாளி’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில், ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருக்கிறார். பின்னர் ஜெயம் ரவி எழுந்து பார்க்கும்போது, இது எந்த வருடம் எனக் கேட்கிறார். அதற்கு யோகி பாபு இது 2016-ஆம் ஆண்டு என்கிறார். அந்த நேரத்தில், டிவியில் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பார். அதனைப் பார்க்கும் ஜெயம் ரவி இது 1996தான் 2016 அல்ல என்பார்.
ரஜினியும் அவரின் அரசியல் வருகை குறித்த பேச்சும் நீண்ட காலமாகவே நிலவி வரும் நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் இந்தக் காட்சி அமைந்திருக்கிறது.
இந்நிலையில் ‘கோமாளி’ ட்ரைலரில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விமர்சனத்தை பார்த்த கமல் வருத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நம்மவர் அவர்கள் இன்று காலை ‘கோமாளி’ ட்ரெய்லரை பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்... நட்பின் வெளிப்பாடா நியாயத்தின் குரலா..? ” எனப் பதிவிட்டுள்ளார்.