புகழ் பெற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. கமல்ஹாசனின் கருத்துகள் திரைவடிவம் பெரும்போதும் இத்தகைய சர்ச்சைகள் எழுந்துள்ளன.
களத்தூர் கண்ணம்மா திரைப்படம் தந்த குழந்தை நட்சத்திரம் தான் கமல்ஹாசன். பின்னாளில் கதை, திரைக்கதை, இயக்கம் என அத்துறையின் பல தளங்களில் சிறப்புற இயங்கியதன் மூலம் இந்திய அளவில் மிகச் சிறந்த திரைக்கலைஞனாக உருமாறினார். கமல்ஹாசன் எனும் கலைஞனின் படைப்புகள் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றதைப் போலவே, சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. தேவர் மகன், விருமாண்டி திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூக்கிப்பிடிப்பதாக விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன.
விஸ்வரூபம் என்ற திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பினால் நாட்டை விட்டே வெளியேறும் சூழல் ஏற்படும் எனக் கூறினார். விஸ்வரூபம் மட்டுமல்ல அவர் அதற்கு முன்னரே எழுதி இயக்கிய ஹே ராம் திரைப்படத்தில் அவர் தொட்டிருந்த கதைக்களமும் அப்போதே கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்தப் படத்தில் சாஹேத்ராம் ஐயங்கார் எனும் கதாபாத்திரத்தில் நடித்த கமல், தேசத்தின் பிரிவினைக்கு காந்தியே காரணம் என்றெண்ணி, அவரைக் கொலை செய்ய திட்டமிடுவார்.
அவரைப் போலவே, பலரும் கொலைத்திட்டம் தீட்ட, இறுதியில் நாதுராம் கோட்சேவால் காந்தி கொல்லப்படுவதை திரைக்கதையாக்கியிருந்தார். தற்போது தேர்தல் பரப்புரைக் களத்தில் ஹே ராம் திரைக்கதை அமைப்பை ஒட்டிய கருத்து ஒன்றை தெரிவிக்க அது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.