ரகுமானுடன் இன்ஸ்டா நேரலையில் கமல்ஹாசன் - ’தலைவன் இருக்கின்றான்’ அப்டேட்
ஜூன் 12ம் தேதி ரகுமானுடன் இணைந்து நேரலையில் பேசவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
”தலைவன் இருக்கின்றான்” திரைப்படம் மூலம் நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரகுமானும் இணையவுள்ளனர். இந்நிலையில் அதற்கு முன்பாக அவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் இணைந்து ரசிகர்களைச் சந்திக்கவுள்ளனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ஏஆர் ரகுமானும், நானும் இன்ஸ்டாகிராம் நேரலையில் ஜூன் 12ம் தேதி மாலை 5 மணிக்கு இணைந்து நேரலையில் வரவுள்ளோம். இசை, திரைப்படம் எனப் பலவற்றைக் குறித்தும் பேசவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஜூன் 11ம் தேதி மாலை என இந்த நேரலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 12ம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் விஜய் சேதுபதியுடன் நேரலையில் இணைந்து கமல்ஹாசன் பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அந்த நேரலை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஏஆர் ரகுமான், கமல் நேரலைக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.