‘தேவர்மகன்2’ - மீண்டும் திரை வாழ்க்கைக்கு திரும்புகிறாரா கமல்?
ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என 25 வருடங்களாக தமிழகத்தில் நடந்து வரும் விவாதத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. ஆனால், ‘ஊடக உந்துதலுக்காக கட்சி ஆரம்பிக்க முடியாது’ எனக் கூறிய கமல்ஹாசன் இந்திய நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் உந்த, உடனே அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டார். அவர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கட்சியை ஆரம்பித்து தன்கென்று தனியாக டார்ச் லைட் சின்னத்தையும் பெற்றார்.
அப்போது அவரை நோக்கி முன்வைக்கப்பட்ட கேள்வி, ‘தேர்தலுக்குப் பிறகு திரும்ப சினிமா பக்கம் போய் விடுவீர்களா?’ என்பது. இந்தக் கேள்விக்கு குழப்பமே இல்லாமல் “எனக்கு ‘இந்தியன்2’தான் கடைசி படம். அதன் பின்பு நடிப்புக்கு முழு முழுக்கு” என்றார். இந்த முடிவின் மூலம் தன்னை நம்பி வந்த தொண்டர்களுக்கு அவர் நம்பிக்கை அளித்தார்.
மேலும் “எனது ‘இந்தியன்2’வின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. நான் நடிப்புக்கு முழுக்குப்போட்டாலும், என்னுடைய படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும். மேலும் பல சமூக நலப் பணிகளையும் மேற்கொள்ளும்” என்று விளக்கம் கொடுத்தார்.
கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி கமல் இந்தத் தீர்க்கமான முடிவை அறிவித்ததை கேட்டு தமிழக மக்கள் கொஞ்சமல்ல அதிகம்தான் ஆடிப் போயினர். தமிழில் ஒரு உச்ச நட்சத்திரமான இவரது அதிரடி முடிவு பலரை கூர் பார்த்தது. தமிழக அரசியலில் முழு மூச்சாக கமல் கால் வைத்துவிட்டார் என்றனர். அதனை உணர்த்துவதற்காக அவர் இதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் என்றனர்.
இப்போது கடைசி கட்டமாக இந்த மாதம் 19 தேதி அன்று தமிழ்நாட்டில் 4 சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற போகிறது. மே 23ம் தேதி வெளியாகும் முடிவுகளை வைத்துதான் பல புதிய கட்சிகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள்தான் கமல் அரசியல் கட்சியை அடுத்த பாய்ச்சலுக்கு தயார்படுத்தப்போகிறது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அது நாடாளுமன்றத்தில் இந்த மாதம் 23 தேதிக்குப் பின் ஒலிக்க இருக்கிறது. இதன் பின் பல அதிரடி மாற்றங்களை பல கட்சிகள் சந்திக்க உள்ளது உண்மை.
இதற்கிடையே கமலின் சினிமா வாழ்க்கை குறித்த சில பேச்சுக்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ‘இந்தியன்2’தான் என் கடைசி படம் என்று வாக்களித்த கமல், இப்போது ‘தேவர்மகன்2’ படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவத் தொடங்கி உள்ளதை பலரும் எதிர்பார்க்கவில்லை.
இதற்கு நடுவே சில நாட்கள் முன்பு ‘பிக்பாஸ்’ சீசன் 3-க்கான போட்டோ ஷூட் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. ஆக, கமல் ஜூன் மாதம் ‘பிக்பாஸ்’ செட்டுக்குள் திரும்ப இருக்கிறார். ‘பிக்பாக்ஸ்’ சீசன்2 முடிந்த பிறகு தேர்தல் களத்தில் கால் வைத்தார் கமல். தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் போட்டி போட்டது மக்கள் நீதி மய்யம். கூடவே தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் களம் கண்டது இந்தக் கட்சி. இப்போது தேர்தல் அனல் குறைந்துவிட்டது. ஆட்டிப்படைத்து வரும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தை விட்டு விரைவில் விடை பெற இருக்கிறது. எனவே கமல், மீண்டும் comfortable zone ஆன சினிமா வாழ்க்கைக்கு திரும்ப போகிறார் என்கிறார்கள் சிலர். அப்போது அரசியல் கட்சி? அதுதான் இப்போதைய பெரும் கேள்வி?
‘தேவர்மகன்2’ படத்திற்காக பொள்ளாச்சி தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ‘இந்தியன்2’ பற்றி கிடைக்கும் செய்திகள் கொஞ்சம் எதிர்மறையாக உள்ளன. லைகா நிறுவனம் ‘இந்தியன்2’விலிருந்து வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘இந்தியன்2’வுக்கான முன் தயாரிப்பு வேலைகள் முடிவுக்கு வருவதற்கு டிசம்பர் வரை நேரம் உள்ளது எனக் கணக்கிட்டு உள்ளது படக்குழு. ஆகவே அந்த இடைவெளிக்குள் ‘தேவர்மகன்2’ வளர்ந்து விடுவான் என்று கமல், கணக்கிறார் எனச் சொல்கிறார்கள்.
‘தேவர்மகன்’ கமல் நடித்த படங்களிலேயே தனி அடையாளத்தை ஏற்படுத்திய படம். 1992 இப்படம் வெளியான போது பெருத்த சர்ச்சைகள் எழுந்தன. பல கட்சிகள் நேரடியாக கமலுடன் மோதின. அப்போது கமல் அரசியல்வாதி இல்லை. ‘தேவர்மகன்2’ எடுக்கப்படும் காலத்தில் அவருக்குப் பின்னால் ஒரு அரசியல் கட்சி இருக்கிறது. அதற்கு அவரே தலைவராகவும் இருக்கிறார். பழைய எதிர்ப்புகள் இருக்குமா என்பது சந்தேகம். ‘தேவர்மகன்’ படத்தில் பெருந்தூணாக இருந்தவர் சிவாஜி. இந்த இரண்டாம் பாகத்தில் சிவாஜி இடத்தை கமல் பிடிக்கலாம். இளம் கமல் பாத்திரத்தை வேறொரு இளம் நடிகர் நடிக்கலாம். எது எப்படியோ இது குறித்த சந்தேகங்கள் அகல, ‘சக்திவேல்’ கமல்ஹாசன் தான் திருவாய் மலர வேண்டும்.