ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்க கற்று கொடுத்தாலே சம நீதி சாத்தியப்படும்: கமல்ஹாசன்
ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினம். அதை முன்னிட்டு, ட்விட்டரில் பலர் # HappyWomensDay2020 மற்றும் #HappyWomensDay ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இந்தச் சிறப்பு மிகுந்த நாளில் பெண்களை வாழ்த்துவதற்காக கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீரதீர பெண்களை போற்றும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புகளும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும். தினசரி இந்தச் சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப் பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தற்போது 'இந்தியன்2' படத்தில் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் இந்தப் படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து விபத்து நடந்தது. ஆகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் கமல்ஹாசன் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “இந்த விபத்து தொடர்பாக நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்கள் அறிய காவல்துறை என்னை அழைத்திருந்தனர். நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்தவர்களில் நானும் ஒருவன். அதனால் நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை கூறுவது எனது கடமை. இழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதை பார்க்கிறேன். அங்கு நடந்த விவரங்களை நான் காவல்துறையிடம் கூறியுள்ளேன்” என்றார்.
இதனிடையே அவர் மக்கள் நீதி மய்யம் சார்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.