'சார்பட்டா’ படத்தில் வரும் உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன் - கமல்ஹாசன்
'சார்பட்டா பரம்பரை’ படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்” என்று படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
கடந்த ஜூலை 22 ஆம் ஆம் தேதி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
அந்த வகையில், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் பா.ரஞ்சித், ஆர்யா உள்ளிட்டப் படக்குழுவினரை நேரில் அழைத்து பாரட்டினார். படம் குறித்து அவர் பேசும்போது, ”சார்பட்டா படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் என் நண்பர்கள் பலர் பாக்சர்களாக இருந்திருக்கிறார்கள்.
படம் பார்க்கும்போது, எனக்கு அந்த காலகட்டத்தை நேரடியாக பார்ப்பதைப்போல இருந்தது, ’சார்பட்டா’ திரைப்படம் மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இருக்கிறது, வெற்றிகரமான ஒரு திரைமொழியோடு மக்களை வெகுவாக கவர்ந்து , மக்களிடம் சென்று சேரும் விதமான ஒரு கூட்டு உழைப்பாக அற்புதமான படமாக இருக்கிறது.
படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பாராட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். நான் மிகவும் ரசித்தேன் .பா.ரஞ்சித் தனது கருத்துக்களை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு திரைமொழியை கையாண்டிருக்கிறார். அது ரசிக்கும் விதமாகவும் , பாராட்டும் விதமாகவும் இருக்கிறது. இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் அன்பும்” என்று பாராட்டியுள்ளார்.