“என் சினிமா வாழ்க்கையில் ‘களவாணி’ முக்கியமானது” - ஓவியா பேட்டி

“என் சினிமா வாழ்க்கையில் ‘களவாணி’ முக்கியமானது” - ஓவியா பேட்டி
“என் சினிமா வாழ்க்கையில் ‘களவாணி’ முக்கியமானது” - ஓவியா பேட்டி

தாம் அறிமுகமான ‘களவாணி’ திரைப்படம் தமது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். 

விமல், ஓவியா நடிப்பில் 2010 ஆம் வெளியான ‘களவாணி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘களவாணி’ திரைப்படம் வெளியாகி சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயராகியுள்ளது. ஜூலை 5ஆம் தேதி வெளியாக இருந்த திரைப்படத்தை இயக்குநர் சற்குணம், இயக்கி, தயாரித்துள்ளார். 

இந்நிலையில், ‘களவாணி2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சாலிகிராமத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ‘களவாணி’ இரண்டாம் பாகத்தின் இயக்குநர் சற்குணம், நடிகை சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘களவாணி’ திரைப்படம் குறித்த அனுபவங்களை அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகை ஓவியா, தாம் அறிமுகமான ‘களவாணி’ திரைப்படம் தமது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் எனத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “எனக்கு ஓவியா என பெயர் வைத்ததே சற்குணம் தான். அதேபோல், எனக்கு தமிழ் கற்றுக் கொத்தவர் விமல். ஒரு குடும்பம் போல் வேலை செய்துள்ளோம். படத்தில் விமலுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரியை விட இளவரசு - சரண்யா அவர்களுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக வந்துள்ளது. எல்லோரும் ஒரு குடும்பம் போல் பணியாற்றியுள்ளார்” என்றார்.

இதனிடையே, ‘களவாணி2’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெயக்குமார் என்பவர் படம் தயாரிக்க கொடுத்த 67லட்சத்து 38ஆயிரம் ரூபாயை திருப்பி தராமல் படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். 

வாங்கிய ரூபாய்க்கு 20சதவிகிதம் வட்டியும், லாபத்தில் 20சதவிகித பங்கும் ஒப்புக்கொண்டு சற்குணம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார் எனவும், படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன் பணத்தை திருப்பி தர வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தும், 10ஆம் தேதிக்குள் இயக்குநர் சற்குணம் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com