‘இறுதியாக ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தொடங்கியது’ - காஜல் ட்வீட்
‘இந்தியன்2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக நடிகை காஜல் அகர்வால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஷங்கரின் ‘இந்தியன்’ திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் பெரும் வெற்றியை பெற்றது. ஆகவே இத்தனை ஆண்டுகள் கழித்து இயக்குநர் ஷங்கர் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தீர்மானித்தார். அதனை அடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்தப் பட வாய்ப்பு குறித்து பழைய பேட்டி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், “இப்படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதால் என்னுடைய திரை வாழ்க்கைக்கு ஒருபடி முன்னேற்றம் கிடைத்துள்ளது. இதில் நடிக்க நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். எனது கதாபாத்திரம் குறித்து ஆவலாக இருக்கிறேன். இது நிறைய கற்றுக்கொள்ள உதவும் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் அவரது ட்விட்டர் பக்கத்தில் படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படம் அவர் மேக் அப் போடுவதை போல உள்ளது. மேலும் அதில், ‘இறுதியாக ‘இந்தியன்2’ படப்பிடிப்பு சிறப்பாக தொடங்கியது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்தியன்2’ படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. அங்கு கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் ஆகிய இருவருக்கும் இடையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் காஜல் நடிப்பில் உருவாகும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் இவரைத் தவிர, சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவை ரவி வர்மன் மற்றும் ரத்னவேலு ஆகிய இருவரும் செய்து வருகின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் கோடை கொண்டாட்டமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.