“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா?” - கலக்கத்தில் திரையரங்க உரிமையாளர்கள்

“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா?” - கலக்கத்தில் திரையரங்க உரிமையாளர்கள்

“சூப்பர் ஸ்டார் படத்திற்கு இந்த நிலையா?” - கலக்கத்தில் திரையரங்க உரிமையாளர்கள்
Published on

வழக்கமாக ரஜினி படங்களுக்கு நிலவும் வரவேற்பு‘காலா’படத்திற்கு இல்லை என தகவல் கிடைத்துள்ளது. ஆக, திரையரங்க உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வழக்கமான ரஜினி படங்கள் என்றால் அவரது ரசிகர்களை தாண்டி தமிழகத்தில் ஒரு திருவிழா காலம் நிலவும். தியேட்டர்கள் ஏறக்குறைய பூஜைகள் நடத்தப்படும் கோயில்கள் போல காட்சி தரும். இந்த முறை முன்பைவிட பரபரப்புகள் அதிகம் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், விரைவில் நிகழ உள்ள ரஜினியின் அரசியல் பிரவேசம். மேலும் தினம் அவர் வெளியிடும் அரசியல் அறிக்கை என அவரை சுற்றி அனல் காற்றுக்கு பஞ்சமில்லை. இந்த அனல் அப்படியே தியேட்டர்களிலும் தீயாய் திகுதிகுக்கும் என பார்த்தால் முன்பதிவுக்கே ‘ஆளைக்காணோம்’ என திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னையிலுள்ள திரையரங்கம் ஒன்றின் விளம்பரதாரர் கூறுகையில், “வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிடும். ஆனால் இந்த முறை, முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே டிக்கெட்கள் முழுமையாக விற்றுள்ளன” என்கிறார். அதேபோல், மாயாஜால் மல்டிபிள் காம்பிளக்ஸ் திரையரங்க நிர்வாகி உதீப் கூறுகையில், “படம் வெளியாகும் நாளுக்கான டிக்கெட்டுகள் மட்டுமே விற்றுள்ளன. வார இறுதி நாட்களுக்கான டிக்கெட்கள் இன்னும் விற்காமல் உள்ளன. வரும் வியாழக்கிழமைக்கு முன் எல்லா டிக்கெட்டுகளும் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

“முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் மட்டும் முழுமையாக விற்றுள்ளன. வெள்ளிக்கிழமைக்கு டிக்கெட்டுகள் இன்னும் விற்கவில்லை. ஒருவேளை கோடை விடுமுறை நாட்களிலோ அல்லது நீண்ட விடுமுறை வரும் நாட்களிலோ படத்தை வெளியிட்டு இருந்தால் நல்ல வரவேற்பு இருந்திருக்கும். இருப்பினும் படம் வெளியான பிறகு உருவாகும் மவுத் டாக் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார் ரோஹினி திரையரங்க நிர்வாக இயக்குனர் நிகிலேஷ் சூர்யா.

சென்னைக்கு மட்டுமல்ல, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் கட்ட பெரிய நகரங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. கோவையில் உள்ள திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “படத்தின் புரமோஷன் மிகவும் குறைவாக உள்ளது. பள்ளிகள் இந்த வாரம் முதல் திறக்கப்பட்டு வருகின்றன. படத்திற்கு கார்பரேட் புக்கிங் நிறைய வருகிறது. ஆனால், ரஜினிகாந்த்தின் மற்ற படங்களைப் போல் ‘காலா’ படத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை” என்றார்.

மாறாக, “டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ‘காலா’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து ரெக்கார்ட் பிரேக் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார் புக் மை ஷோ ஆன் லைன் டிக்கெட் விற்பனை இணையதளத்தின் நிர்வாகி ஆஷிஷ் சக்‌ஷேனா. 

ரஜினியின் ‘கபாலி’ படம் வெளியானபோது இரு தினங்களுக்கு இருந்த வரவேற்பு தற்போது இல்லை. ‘கபாலி’ படத்திற்கு செய்த பத்தில் ஒரு பங்கு புரமோஷன் கூட‘காலா’விற்கு இல்லை. ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்த நாள் முதல் அவரது ஒவ்வொரு பேச்சும், நடவடிக்கையும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.  

சமீபத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ரஜினியை கண்டித்தனர். அதேபோல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட சென்ற ரஜினி போராட்டம் குறித்து தெரிவித்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், சமீப காலமாகவே ரஜினிக்கு எதிரான மனநிலை அரசியல் மட்டத்தில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தேர்தல் வரும் போதுதான் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், வழக்கமான ரஜினி படங்கள் எழுப்பும் அதிர்வலைகளை ‘காலா’ ஏற்படுத்தவில்லை. ஆகவேதான் டிக்கெட் விற்பனை சரிந்து உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com