வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. பரபரக்கும் காலா டீஸர் டயலாக் !
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் டீசர் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியானது. தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார்.
‘கபாலி’ வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி, ‘காலா’வின் டீசர் மார்ச் ஒன்றாம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவையொட்டி, காலா டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில், காலா டீசரை நள்ளிரவு சரியாக 12 மணி அளவில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
கபாலி திரைப்படத்துக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித்- ரஜினியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா பட டீசரில், ரஜினிகாந்த் நெல்லைத் தமிழில் பேசி நடித்திருக்கிறார். அத்தோடு மட்டுமில்லாமல் ‘வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன், தில் இருந்தா மொத்தமாக வாங்கலே’ என்று அனல்பறக்க ரஜினி பேசியுள்ள பஞ்ச் வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கானோர் இந்த டீசரை தற்போது யூடியூப் பக்கத்தில் பார்த்துள்ளனர். மேலும் இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. காலா திரைப்படத்தில் இந்தி நடிகர் நானா பட்டேக்கர், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர்.