\
k bhagyaraj passed away updates
கே.பாக்யராஜ்எக்ஸ் தளம்

#KBhagyaraj| பாக்யராஜ் கண்கள் தானம்.. நாளை இறுதி மரியாதை.!

நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமான செய்தி, தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கே.பாக்யராஜ் மறைவு

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இரங்கல்

”என்ன சொல்வதென்றே தெரியவில்லை” - ஊர்வசி

”குருவின் இறப்பின்போது சிஷயனால் பேசவே முடியவில்லை” - விக்ரமன்

ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் இரங்கல்

மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இரங்கல்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்புதிய தலைமுறை

தமிழ் திரைப்பட உலகில் தனது தனித்துவமான படைப்பாற்றலாலும், குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை வலியுறுத்திய திரைப்படங்களாலும், தலைமுறைகள் பலரின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கே. பாக்யராஜ். அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி...!

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

இயக்குநர் பாரதிராஜாவின், ‘16 வயதினிலே’ படத்தில் உதவி இயக்குநராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய பாக்யராஜ், ’சுவர் இல்லாத சித்திரங்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பாக்யராஜ், 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமாகி 17 நாட்களில் பாக்யராஜ் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்யராஜை, அவர் எப்போதும் பிரியமுடன் ‘பாகி’ என்றே அழைப்பார்.

பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்

1979 - சுவர் இல்லாத சித்திரங்கள்

1980 - ஒரு கை ஓசை

1981 - மௌன கீதங்கள்

1981 - இன்று போய் நாளை வா

1981 - விடியும் வரை காத்திரு

1981 - அந்த 7 நாட்கள்

1982 - தூறல் நின்னு போச்சு

1982 - பொய் சாட்சி

1982 -டார்லிங், டார்லிங், டார்லிங்

1982 - முந்தானை முடிச்சு

1984 - தாவணிக் கனவுகள்

1985 - சின்ன வீடு

1987 - எங்க சின்ன ராசா

1989 - ஆராரோ ஆரிரரோ

1990 - அவசர போலீஸ் 100

1991 - பவுனு பவுனுதான்

1991 - சுந்தர காண்டம்

1992 - ராசுக்குட்டி

1994 - வீட்ல விசேஷங்க

1995 - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

1998 - வேட்டிய மடிச்சுக்கட்டு

2003 - சொக்கத்தங்கம்

2006 - பாரிஜாதம்

2010 - சித்து +2

பல்துறை வித்தகர் பாக்யராஜ்

சிரித்தபடியே இருந்தவர் சிரித்தபடியே மரணமடைந்திருக்கிறார் - சுஹாசினி

’பாக்யா’ மூலம் பத்திரிகையாளராக மிளிர்ந்த பாக்யராஜ்

இயக்குநர் பாக்யராஜ் இயக்கிய முக்கியமான 10 படங்கள்

1. சுவரில்லாத சித்திரங்கள்

இவர் இயக்கிய முதல் படமான சுவரில்லாத சித்திரங்கள் மெகா ஹிட்டானது. முதல் படத்திலேயே தனது திறமையால் அனைவரையும் ஈர்த்தார். சுதாகர், பாக்யராஜ், சுமதி, கவுண்டமணி நடித்த இந்த படம் காதலை மட்டுமல்ல, அந்த கால இளைஞர்களின் வாழ்க்கை, கனவு, வேலையில்லா திண்டாட்டம், பசி கொடுமை என பல விஷயங்களை வெளிப்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் பாக்யராஜின் நடிப்பும், கவுண்டமணியின் நகைச்சுவையும் இன்றும் பேசப்படுகின்றன. கங்கை அமரன் இசையமைப்பில் உருவான காதல் வைபோகமே பாடல் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

2. முந்தானை முடிச்சு

கிராமப்புற பின்னணியில் அமைந்த நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில்தான் ஊர்வசியை அறிமுகம் செய்திருந்தார். கைக்குழந்தையுடன் இருக்கும் பள்ளி ஆசிரியரை, ஊர்வசி எப்படி திருமணம் செய்கிறார், அதற்கு என்னென்ன பொய்கள் சொல்கிறார் என்ற ரீதியில் கதை நகரும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இளையராஜா, பாக்யராஜ் கூட்டணியில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

3. அந்த 7 நாட்கள்

பாக்யராஜ் மற்றும் அம்பிகா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் மலையாளியான பாலக்காட்டு மாதவனுக்கும், தமிழ் பெண் வசந்திக்கும் காதல். ஆனால், சூழ்நிலை காரணமாக ராஜேஷை மணக்கிறார் வசந்தி. விஷயம் அறிந்த கணவர் அவரின் காதலை சேர்த்து வைக்க நினைக்க, என்ன நடந்தது என்பதுதான் கதை.பாக்யராஜ் நடிப்பு, அம்பிகாவுடனான காதல் என எல்லாமே படத்தில் சிறப்பாக இருக்கும். இந்த பட சாயலில், இந்த கதையை தழுவி தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவில் பல படங்கள் வந்தது.

4. இன்று போய் நாளை வா

பாக்யராஜ், ராதிகா நடிப்பில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் 3 நண்பர்கள், எதிர் வீட்டு பெண் என சாதாரண பின்னணியை , மிக இயல்பாக காட்சிபடுத்தியிருப்பார் பாக்யராஜ். அந்த பெண்ணை கவர நண்பர்கள் செய்யும் விஷயங்கள், அந்த கிராமத்து பின்னணி, பெண்ணின் வெகுளித்தனம் ஆகியவை மக்களை வெகுவாக ஈர்த்தது. ராதிகாவின் நடிப்பும், நகைச்சுவை காட்சிகளும் இன்றும் பேசப்படுகின்றன. இந்த படமும் பிற்காலத்தில் பல கதைகளாக உருவானது.

5. ஒரு கை ஓசை

பாக்யராஜ் இயக்கிய 2வது படம். வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர், மருத்துவரிடம் காதலை சொல்லும் கதை. அந்த காலத்தில் டீக்கடைகளில் இருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகள் என பல விஷயங்களை சொன்ன படம். அப்படி பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன் நடித்திருந்தார். பாக்யராஜ் படங்களுக்கே உரிய கிளைமாக்ஸ் இதிலும் இடம்பிடித்து, பலரை கவர்ந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தப்ப்டம் உருவாகியிருந்தது.

6.சின்ன வீடு

பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்து வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வணிகரீதியில் வெற்றி பெற்ற திரைப்படம்.இந்தப் படம் விருப்பம் இல்லாத திருமணம், உடல்பருமனான மனைவி, மற்றொரு பெண்ணுடன் உறவு என பல விஷயங்களை சொல்லும். பாக்யராஜ் மனைவியாக கல்பனா நடித்து இருந்தார். பாக்யராஜ் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பு, கல்பனாவின் வெகுளித்தனம் படத்துக்கு பலமாக இருந்தது.

7. மெளனகீதங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கங்கை அமரன் இசையமைத்த திரைப்படமாகும்.ஒரே அலுவலகத்தில் வேலை, எதிரெதிர்வீடு, ஆனால், பிரிந்திருக்கும் கணவன்-மனைவி என்ற வித்தியாசமான கருவில் உருவாகியிருந்தது இந்தப்படம். பாக்யராஜ் நடிப்பு மட்டுமல்ல, சரிதாவின் கோபம், வைராக்கியமும், இவருக்கும் இடையேயான சண்டையும் படத்தின் முக்கிய அம்சங்கள். கங்கை அமரன் இசையில் 'மூக்குத்திப் பூமேலே', 'மாசமோ மார்கழி மாசம்', 'டாடி டாடி' பாடல்கள் பிரபலமடைந்தன. பாக்யராஜுக்கு மகனாக வரும் சிறுவனின் நடிப்பும் பேசப்பட்டது.

8. சுந்தரகாண்டம்

பாக்யராஜ் எழுதி, இயக்கிய இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ் , பானுப்ரியா, சிந்துஜா, மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் வரும் ஐந்தாவது காண்டத்தின் பெயரைத் தழுவியே இப்படத்தின் பெயர் வைக்கப்பட்டது. பின்னர், இந்தப் படம் இந்தி மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்டு அந்தாஜ் என்ற பெயருடன் வெளிவந்தது. தான் படித்த பள்ளியிலேயே தமிழ் ஆசிரியராக வரும் பாக்யராஜை, பள்ளி மாணவி சிந்துஜா காதலிக்கிறார். அது தவறு என சொல்லி, பானுப்பிரியாவை மணக்கிறார் பாக்யராஜ். மீண்டும் அவர்கள் வாழ்வில் சிந்துஜா வர என்ன நடக்கிறது என்பது தான் கதை. படத்தில் நகைச்சுவையும் கதைக்கு பலம்.

9. டார்லிங் டார்லிங் டார்லிங்

பாக்கியராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் சிறுவயதில் தொழிலதிபர் மகள் பூர்ணிமாவை காதலிப்பார் பாக்யராஜ்.அவர் படித்து விட்டு பெரியவர் ஆகி வர, பாக்யராஜ் என்ன செய்கிறார், அவர் நிலை என்ன ஆனது என்பது கதை. படத்தின் இறுதிக்காட்சி யாரும் எதிர் பாராதது. அதே படத்தில் இடம் பெற்ற அழகிய விழிகளில் பாடல், பூர்ணிமாவின் நடனம், யதார்த்தமான வசனங்கள் படத்தை வெற்றி பெற வைத்தன.

10. தூறல் நின்னு போச்சு

பாக்கியராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் பாக்யராஜ் , சுலோக்சனா, நம்பியார் நடிப்பில் உருவான கிராமத்து பின்னணியிலான படம். நம்பியாரை வேறு மாதிரி காண்பித்து இருப்பார் பாக்யராஜ். அவரின் நடிப்பும், என் சோக கதை கேளு பாடலுக்கு ஆடும் அழகும் சிறப்பாக அமைந்தன. இந்தப் படத்தின் தங்கச்சங்கிலி, ஏரிக்கரை பூங்காற்றே பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. செந்தாமரையின் வில்லத்தனம் எல்லோராலும் பேசப்பட்டது.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ‘தாவணிக் கனவுகள்’!

பாக்யராஜுக்கு அரசு மரியாதை

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

- தமிழக முதல்வர் விஜய்

பெசன்ட் நகரில் தகனம்

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

பாக்யராஜை நடிகராக அறிமுகப்படுத்திய பாரதிராஜா

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்த பாக்யராஜை, நடிகராக அறிமுகம் செய்ததும் பாரதிராஜாதான். தன்னுடைய பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்கள் கொடுத்து பாக்யராஜை நடிகராக்கிய பாரதிராஜா, தன்னுடைய 'புதிய வார்ப்புகள்' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல்

நேற்றிரவு 10.30 மணிக்கு பாக்யராஜ் சார் எனக்கு கால் பண்ணாங்க. சிரித்து கொண்டே சந்தோஷமாக பேசினார்; இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது; அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான்; என்னுடைய தந்தை இறந்தது போல் உள்ளது; அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.

தன்னுடைய இயக்கம் குறித்துப் பேசிய பாக்யராஜ்

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவிடம் பணியாற்றியது குறித்து பிபிசியிடம் பேசியிருந்த இயக்குநர் கே.பாக்யராஜ், ''எங்க டைரக்டர் எப்பவுமே சீரியஸ் டைப். எல்லா விஷயத்தையும் அழுத்தமாக சீரியஸ் ஆக சொல்வார். நான் எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் அதை எளிமையாகவும், காமெடி, சென்டிமென்ட் கலந்தும் கொடுக்கணும்னு நினைப்பேன்'' என்று கூறியிருந்தார்.

மஞ்சள் காமாலையால் இறந்துபோன முதல் மனைவி

முன்னணி நாயகியாக இருந்த பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர். முன்னதாக, ’பாமா ருக்மிணி’ உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நடித்த பிரவீணாவை, 1981-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர், மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983ஆம் ஆண்டில் மறைந்தார்.

பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்

\
விஜயகாந்த், பிரேமலதாஎக்ஸ் தளம்

பன்முகத் திறமைகளால் தமிழ் திரையுலகில் தனித்துவமான முத்திரை பதித்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான திரு. கே. பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற தரமான படைப்புகளை வழங்கி, தனது தனித்துவமான திரைக்கதை அமைப்பு, வசன நடை மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மறைந்த கே. பாக்யராஜ் அவர்களுக்கும், நமது கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் நீண்டகால அன்பும் நட்பும் நிலவியது. குறிப்பாக 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை. கேப்டன் அவர்களின் கலைப் பயணத்தில் பாக்யராஜ் அவர்கள் வகித்த நட்பும் பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

– பிரேமலதா விஜயகாந்த் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.

இயக்குநர் பிரேம் இரங்கல்

”பெரிய ஆளாயிருந்தாலும் பாக்யராஜ் சாருக்கு நான் மாணவன்தான்” - பார்த்திபன்

”இன்னிக்கு நான் யாருக்கு வேணும்னாலும் பெரிய ஆளா இருக்கலாம். ஆனா பாக்யராஜ் சாருக்கு மாணவன்தான். இப்பவும் அவர் போனில் வந்து 'ஹலோ' சொன்னாலும் 'இதோ வந்திட்டேன் சொல்லுங்க சார்'னு நேர்ல போயே நிற்பேன். பாக்யராஜ் சாருக்கும் பாரதிராஜா சாருக்குமிடையே நிறைய முரண்பாடுகளும் சில கசப்பான சம்பவங்களும் இருந்திருக்கு. இருந்தாலும் இன்னிக்கும் பாரதிராஜா பற்றி பேசுறப்போ, 'எங்க டைரக்டர்'னுதான் சொல்வார் பாக்யராஜ் சார்”

புதிய தலைமுறை வெளியீடாக வந்த ’கோலிவுட் உங்களை வரவேற்கிறது’ என்ற நூலில் இயக்குநர் பார்த்திபன்

பாக்யராஜ் பெற்ற விருதுகள்

சிறந்த நடிகர் பிலிம்பேர் விருது - முந்தானை முடிச்சு

தமிழ்நாடு மாநில திரைப்பட விருது: சிறந்த வசனம் - புதிய வார்ப்புகள்

சிறந்த திரைக்கதை விருது - மௌன கீதங்கள்

கலைமாமணி விருது - திரைப்படத் துறையில் சிறப்பான கலைச்சேவைக்காக

வாழ்நாள் சாதனையாளர் விருது (2014) - சீமா (SIIMA) விருது

இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த பாக்யராஜ்!

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன், சங்கர் - கணேஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய கே.பாக்யராஜ் 1988-ல் வெளியான ’இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரமெடுத்தார். அந்தப் படத்தில் 'அம்மாடி இதுதான் காதலா', 'கைய பிடிக்கணும் சாமி' பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. சகாதேவன் மகாதேவன் (1988 - ஒரு பாடல்), தென்பாண்டி சீமையிலே (1988), பொண்ணு பாக்க போறேன் (1989), ஆராரோ ஆரிராரோ (1989), பவுனு பவுனுதான் (1991), ஞானப்பழம் (1996) உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார் கே.பாக்யராஜ்.

கதை திருட்டுக்காக குரல் கொடுத்த பாக்யராஜ்

தமிழ் சினிமாவில் கதை திருட்டு சர்ச்சை எழும்போது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட பாக்யராஜ், ’சர்கார்’, ’கோமாளி’, ’ஹீரோ’ போன்ற பல பெரிய திரைப்படங்களின் கதை உரிமைப் பிரச்னைகளில் இருதரப்பையும் விசாரித்து நியாயமான தீர்ப்புகளை வழங்கியவர். மேலும் புதிய மற்றும் சிறிய எழுத்தாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டவர் ஆவார்.

கண்தானம் செய்த இயக்குநர் பாக்யராஜ்

இயக்குநர் கே. பாக்யராஜ், தன்னுடைய கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்ததால், அவரது கண்களை தானம் பெறுவதற்காக மருத்துவர்கள் குழு இல்லத்துக்கு வருகை தந்துள்ளது. இதன்மூலம், மறைந்தும் உலகைப் பார்ப்பார்.

கவுண்டமணி, செந்தில் வாழ்வில் பாக்யராஜ்

நாடக கம்பெனியில் சிறுசிறு வேலைகள் செய்துகொண்டிருந்த நடிகர் செந்திலை, ’இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில் முதன்முறையாக வசனம் பேசி நடிக்க வைத்தவர் பாக்யராஜ்.

அதுபோல், நாடகத்தில் 'Counter' கொடுப்பதில் வல்லவர் என்பதால், 'Counter' மணி என்று அழைக்கப்பட்ட மணியின் பெயரை, உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ், தவறுதலாக டைட்டிலில் 'கவுண்டமணி' எனப் போட அதன்பின் அதுவே அவரது பெயராக மாறியது. பின்னாளில் அவர்கள் இருவரும் உச்ச நிலைக்கு அடைந்து, தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி

பாக்யராஜ் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

”ஒரேயொரு VIP பாக்யராஜ்தான்” - இயக்குநர் விக்ரமன்

"நான் இயக்கிய முதல் படமான ’புது வசந்தம்’ பட பூஜைக்கு பல VIP-க்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்தேன். பூஜைக்கு நான் எதிர்பார்த்த எந்த VIP-ம் வரவில்லை. அன்று வந்த ஒரேயொரு VIP பாக்யராஜ் சார்தான். அவருக்கு அன்று 'அவசர போலீஸ் 100' பட ஷூட்டிங் இருந்தது. ஆனாலும் வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அதிலிருந்து நான் எடுத்த கடைசி படம் வரை நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளாமல் இருந்ததே இல்லை.. அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர் அவர்” - திரைப்பட இயக்குநர் விக்ரமன்

இளையராஜாவுடன் மோதல்.. பாக்யராஜ் இசையமைப்பாளரானது எப்படி?

பாக்யராஜ் இசையமைப்பதற்குப் பின்னால் சில காரணங்கள் இருந்தன. அதாவது, அவரது படம் வெளியான சமயங்களில், இளையராஜாவிற்கும் அவருக்கும் மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாக்யராஜ், ”இளையராஜா, ’சின்ன வீடு’ படம் வரையில் என்னுடைய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டுதான் இருந்தார். அடுத்து என்ன படம் என்பதை முன்கூட்டியே சொல்லும்படி கேட்பார். நானும் ஸ்கிரிப்ட் தயார் ஆனதும் முன்கூட்டியே சொல்லுவேன். அடுத்த ஸ்கிரிப்டை எடுத்துக்கிட்டு அவரோட ஸ்டூடியோ போயிருந்தேன். அப்போ அவர் ரெக்கார்டிங்ல இருக்குறதா அவரது உதவியாளார் சொன்னார். மேலும் அவர், ‘நீங்க சார, வீட்டுக்குப் போய்ப் பாருங்கள்’ என்றார். உடனே, ’நான் ஏன் வீட்டிற்குப் போக வேண்டும்? நான் எப்போதும் அவரை இங்குவந்து பார்ப்பதுதானே வழக்கம்’என்றேன். ’இல்லை.. இல்லை..’ எல்லோரும் வீட்டுக்கு வந்துதான் பார்க்குறாங்க’ என்றார் அவர். ’நீங்கள் சொல்வது புதிதாக உள்ளது, நான் வந்து போனதா அவரிடம் சொல்லுங்கள். தேவைப்பட்டா நான் பார்க்கிறேன்’ என்றேன்.

அதன்பிறகு இளையராஜாவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான் பொதுவாக, சிறு வயதில் கேரம் போர்டு விளையாடும்போது, மேடைக் கச்சேரிகளைப் பார்த்துதான் வளர்ந்தேன். அந்தச் சமயத்தில் நான் இசையைக் கற்றுக்கொண்டிருந்தால், இப்படியான அவமானங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லையே எனத் தோன்றியது. அதன் பிறகு இப்போதும் ஒண்ணுமில்லை கற்றுக்கொள்ளலாம் என சுதாகர் மாஸ்டரிடம் இசையை கற்றுக்கொண்டு, ’இது நம்ம ஆளு’ படத்திற்கு இசையமைத்தேன்” என பின்னணியின் சுவாரஸ்யத்தை ஒருமுறை தெரிவித்திருந்தார் பாக்யராஜ்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்

”எனக்கு பாடம் கொடுத்த பாக்யராஜ்” - இளையராஜா

”பாக்யராஜிடமிருந்து நான் முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன். பாரதிராஜா படங்கள் வரிசையா நடந்துகொண்டிருந்த போது, சிட்டிவேஷன நாங்க எல்லாம் பேச மாட்டோம். கேஷுவலாப் பேசிக்கிட்டே பாடல்களை கம்போஸ் பண்ணுவோம். பாட்டே இல்லாத படத்துக்குக்கூட பாட்டு எடுக்குறது வழக்கம். இந்த நிலையில, முக்கியமான ஒரு வேலை இருக்கு. ’ஒரு படத்துக்கு பாக்யராஜ் கதை சொல்வாரு’என்று என்னிடம் பாரதிராஜா சொன்னார். அதற்கு நான், ‘என்னய்யா, நீ கண்டகண்ட ஆட்களை எல்லாம் கதை சொல்ல அனுப்புறியானு’ கேட்டேன். அதுக்கு,‘நீ முதல்ல கேளுனு’ அவர் சொன்னார். நிஜமாவே, அவர் சொன்ன கதையில, நான் ஃபர்ஸ் டைமா, இரண்டு பேரு கதை சொல்வதில் அவுட் ஆயிட்டேன். அதுல ஒண்ணு பாக்யராஜ். அவர் சொன்ன ஸ்கிரீன்பிளேயில் நான் அசந்துபோயிட்டேன். அசந்து போயி, சிரிச்சி, சிரிச்சி வயிறெல்லாம் புண்ணாப் போச்சு. அதுனாலேயே நான் கம்போஸ் பண்ணுறதயே விட்டுட்டேன். அப்புறமா செகண்டு ஆப் எங்கனு கேட்டேன். செகண்டு ஆப்ல அவர் ஏதோ ஒரு ஐடியா வச்சிருக்கிறாராம்’ என்றார். இத, நான் அன்றைக்கு அவரிடம் (பாக்யராஜ்) சொல்லவில்லை. அப்புறமா பார்த்தா, இவர ஒருமாதிரியா ட்ரீட் பண்ணினோம். அது தவறு. யாருகிட்ட யாரு என்ன திறமைனு நாம டிசைடு பண்றது யாரு? அவுங்க அவுங்ககிட்ட இருக்கக்கூடிய திறமைய டிசைடு பண்றதுக்கு நாம யாருனு எனக்குள்ள ஒரு தீர்மானம் வந்தது. அன்றிலிருந்து புதுசா யாரு வந்தாலும் அவுங்களுக்கு மியூசிக் பண்றது. அவுங்களே மறுக்கறதே கூடாது என்கிற ஒரு முடிவெடுத்தேன். அந்த முடிவ என்னை எடுக்கவைத்ததற்குக் காரணம் பாக்யராஜ் ஒருத்தருதான். பாக்யராஜ்தான். உங்களுக்கு கதைய கொடுப்பதைவிட, கதையில எவ்வளவோ கருத்துகளைக் கொடுப்பதைவிட எனக்கு ஒரு பாடம் கொடுத்தாரு பாருங்க. எனக்கே ஒரு பாடம் கொடுத்த ஒரு வாத்தியார்”.

பாக்யராஜின் 50 ஆண்டுகள் திரைப் பயணம் குறித்த ’கலாட்டா’ நிகழ்வில் இசைஞானி இளையராஜா பேச்சு

"என்னை காப்பாற்றியவர் பாக்யராஜ்" - ரஜினிகாந்த் சொன்ன சம்பவம்

இன்னொரு விஷயத்துக்காக பாக்யராஜ் சாரை என் வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாது. இங்கு வந்ததற்கு முக்கிய காரணம் கூட அதுதான். அதை எப்படியாவது மக்களுக்கு சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தேன். 95ல் சிவாஜி சாருக்கு செவாலே விருது மலேசியாவில் கொடுத்தார்கள். அதற்காக சினிமா துறை மொத்தமும் அவரை பாராட்ட வேண்டும், அரசும் சேர்ந்து பாராட்ட வேண்டும் என சேப்பாக்கம் மைதானத்தில் விழா ஏற்பாடானது. அதற்கு முதலமைச்சர் தான் சிறப்பு விருந்தினர். கடைசியில் நான் தான் நன்றியுரை வழங்க வேண்டும். நான் பேசும் போது ஜெயலலிதாவை கோபமாக விமர்சித்து பேசிவிட்டேன். எப்போதும் கோபத்திற்கு ஆயுசு கம்மி, ஆனால் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளுக்கு ஆயுசு அதிகம். அதனால் தான் கோபத்தில் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என பெரியவர்கள் சொல்வார்கள். அவரை பற்றி ஆவேசமாக பேசியது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அது சிவாஜி சாருக்கான விழாவாக இருந்தாலும் அதிமுகவை சார்ந்த பலரும் அங்கு வந்திருந்தார். நான் பேசி முடித்த பின்பு எல்லோர் முகமும் வாடியது. ஸ்ரீதேவி கூட என்ன இப்படி பேசிவிட்டீர்கள் எனக் கூறினார். 

actor rajinikanth says on dharman first look movie
rajinikanthPT Web

மைதானத்துக்கு வெளியே இருக்கும் பேருந்துக்கு செல்ல எல்லோரும் ஜீப்பில் செல்லும் போது நானும் அதில் வருகிறேன் எனக் கூறினேன். அது ஓப்பன் ஜீப், சிலர் கல்லைவிட்டு எறிந்தனர். அதே சமயம் பாட்ஷா படம் வெளியான நேரம் என்பதால், ரசிகர்கள் ஆர்வமாக வந்து ஆட்டோகிராப் வாங்கினார். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வருவதற்குள் நாங்கள் வந்த பேருந்து மூன்றும் கிளம்பிவிட்டது. நான் இந்தக் கூட்டத்துக்குள் மாட்டிக்கொண்டேன். தூரத்தில் போலீஸ் ஜீப் இருந்தது அவர்களும் ஜெயலதாவை எதிர்த்து பேசிய என்னை காப்பாற்ற முயன்றால் எதுவும் பிரச்சனை வருமோ என நினைத்து வேடிக்கை பார்த்தனர். சிலர் அடிக்கிறார்கள், கிள்ளுகிறார்கள் நான் என்ன செய்வது என யோசிக்கும் முன் ஒரு குரல் கேட்டது, பார்த்தால் பாக்யராஜ் ஓடி வருகிறார். அவர் வந்து போலீசிடம் ஆவேசமாக பேசி என்னை போலீஸ் ஜீப்பில் ஏற்றி பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து செல்ல வைத்தார். அதை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்" என்றார்.

முன்னதாக விழா ஒன்றில் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் பாக்யராஜ் அவருக்கு அளித்த உதவிகளை நினைவுகூர்ந்.

பாக்யராஜ் உடலுக்கு சீமான் அஞ்சலி

பாக்யராஜ் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய ஆளுமை - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி

நடிகர் ராமராஜன் அஞ்சலி 

இயக்குநர் பாக்யராஜ் எல்லோருக்குமான ரோல் மாடல் ...திரைக்கதை மன்னன் மட்டுமல்ல.. திரையுலகத்துக்கே மன்னன் - நடிகர் ராமராஜன்

வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்த டி. ராஜேந்தர்

"எமலோகத்தில் யார் இவரை கதை, திரைக்கதை எழுத அழைத்தார்கள் என்று தெரியவில்லை.. விதி விளையாடிவிட்டது” - மறைந்த இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு இயக்குநர் டி.ராஜேந்தர் இரங்கல் வீடியோ

பாக்யராஜ் மறைவு பேரிழப்பு: சி.பி.ராதாகிருஷ்ணன்

பாக்யராஜ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

எம்.ஜி.ஆரை மறைவுக்கு பிறகு திரையில் தோன்ற வைத்தவர்

இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் தனுஷ்

பாக்யராஜின் கண்கள் தானம்

மறைந்த திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருந்ததால் பாக்யராஜுன் வீட்டுக்கு வந்த கண் மருத்துவமனை குழுவினர் வந்து அவரது கண்களை எடுத்து சென்றனர்.

பாக்யராஜ் உடலுக்கு நாளை இறுதிமரியாதை

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடல் இறுதி மரியாதைக்காக நாளை காலை 9 மணி வரை இல்லத்தில் வைக்கப்படவிருக்கிறது. அதற்கு பிறகு பெசன்ட் நகர் மின் மயானத்தில் 10.45 மணி முதல் 11 மணிக்குள் பாக்யராஜ் இறுதி சடங்குகள் நடைபெற்று மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com