‘புதுமுகம் ஜோதிகா’:‘நாச்சியார்’பற்றி சிவகுமார் விமர்சனம்

‘புதுமுகம் ஜோதிகா’:‘நாச்சியார்’பற்றி சிவகுமார் விமர்சனம்
‘புதுமுகம் ஜோதிகா’:‘நாச்சியார்’பற்றி சிவகுமார் விமர்சனம்

பாலாவின் ‘நாச்சியார்’ குறித்து தனது கருத்தை நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவின் நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கியுள்ள திரைப்படம்  ‘நாச்சியார்’.இப்படம் வெளியாகி தற்சமயம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நடிகரும் ஜோதிகாவின் கணவர் சூர்யாவின் தந்தையுமான நடிகர் சிவகுமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப் பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக் காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. 

பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு நடுநிலையான திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் கம் பேக்கை வாழ்த்தி வரவேற்போம்.  ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்கக் கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ...? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா...
நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா...) ஒளிப்பதிவு பிரமாதம். 

முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறுக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான்.” என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com